Saturday, April 13, 2024

“VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 7 மாதங்கள் கழித்து திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்தாலும் இதற்காக பல்வேறு சுகாதார வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மொத்த இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டுமே நிரப்ப்பபட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

7 மாதங்களுக்குப் பின்னர் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதால் புத்தம், புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் என்று திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் அப்படியொன்று நடந்துவிடாது என்பதற்கான அறிகுறிகள்தான் தமிழ்ச் சினிமாவில் தென்படுகிறது.

தமிழ்ச் சினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்னர் தற்போது படமெடுத்து வரும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி உருவாக்கிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட ஒளிபரப்புக் கட்டணத்தில் முட்டுக்கட்டை போடுவதால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வருமா என்பது தெரியாத குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா வி.பி.எஃப். கட்டணம் குறித்து இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்ட வேண்டிய கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனத்திற்கு செலுத்த முடியும்.

வாராவாரம் கட்டும் திரையிட்டூக் கட்டணத்தை இனியும் நாங்கள் செலுத்த மாட்டோம்.

இதை பற்றி நாங்கள் ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கும், டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிக்கும் தெரிவித்தும் அவர்கள் இதற்கு இப்போதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளியிடப்பட மாட்டாது…” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தரும் வி.பி.எஃப். கட்டணத்தை விநியோகஸ்தர்களும் கட்ட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் அங்கே இது பற்றி இப்போதைக்கு முடிவெடு்க்க முடியாது.

ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்கள் திரையிடப்பட மாட்டாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது தியேட்டர்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களது தரப்பில் விசாரித்தபோது அவர்கள் விரைவில் தங்களது சங்கத்தினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News