Friday, April 12, 2024

‘ஈஸ்வரனு’க்கு வந்த அடுத்தப் பிரச்சினை – படத்தை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள ‘ஈஸ்வரன்’ படத்திற்கு அடுத்தப் பிரச்சினையும் துவங்கியுள்ளது.

ஏற்கெனவே “ஓடிடியில் வெளியிடுகிறோம்…” என்ற தயாரிப்பாளரின் அறிவிப்பையடுத்து ஈஸ்வரனுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் தற்போது தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இன்னொரு பிரச்சினையும் ‘ஈஸ்வரனுக்கு’ எதிராக வெடித்துள்ளது. அது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுத்துள்ள புகார்தான்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில், சிம்புவின் நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் 2017-ம் ஆண்டு வெளியானது.

இந்தத் திரைப்படத்திற்கு படத்தின் நாயகனான சிம்பு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சிம்புவிடம் இருந்து உரிய நஷ்ட ஈட்டினை பெற்றுத் தரும்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இந்தப் புகாரை விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம் உரிய நஷ்ட ஈட்டினை வழங்கும்படி சிம்புவைக் கேட்டுக் கொண்டது. ஆனால், சிம்பு இதற்கு மறுக்கவே வெளியில் சொல்லாமல் சிம்புவுக்கு ரெட் கார்டு போட்டது தயாரிப்பாளர் கவுன்சில். ஆனால், அதையும் மீறி சிம்பு மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது இதே விவகாரத்தை மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குக் கொண்டு வந்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்படி தற்போதைய தயாரிப்பாளர் கவுன்சில் சிம்புவுக்கும், அவரது தந்தையான டி.ராஜேந்தருக்கும் அழைப்பு கொடுத்தும், இருவரும் செல்லவில்லை. அதோடு இதைப் பற்றி இருவருமே கண்டு கொள்ளவில்லை.

இதனால் கோபமான தயாரிப்பாளர் கவுன்சில் “எங்கள் அனுமதியில்லாமல் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு இப்போது கடிதம் எழுதி எச்சரித்துள்ளதாம். இதனால் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட கியூப் நிறுவனம் தயங்கி நிற்கிறதாம்.

இந்தத் தகவலை வெளியிட்டிருக்கும் மற்றொரு தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “தயாரிப்பாளர் கவுன்சில் எழுதிய கடிதம் ஒரு தயாரிப்பாளரை சாகடிப்பதற்குச் சமம். இது முற்றிலும் தவறானது” என்று கண்டித்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ படம் வெளியாக நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் இருப்பதால் அதற்குள்ளாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!

- Advertisement -

Read more

Local News