Friday, April 12, 2024

தமிழ்ச் சினிமா வரலாறு-65-சோ-வை இயக்குநராக்கிய கே.பாலசந்தர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாடக நடிகராக இருந்த சோ நாடக ஆசிரியராக மாறுவதற்கு முன்னால் அவரது குழுவிற்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் கூத்தபிரான் என்ற நாடக ஆசிரியர். ராமசாமி என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவருக்கு  ‘சோ’ என்ற   பெயரை சம்பாதித்துத் தந்த ‘தேன்மொழியாள்’ நாடகத்திற்குக்கூட வசனம் எழுதியவர் அவர்தான்.

சோவின் தம்பியான அம்பி என்ற ராஜகோபாலும் மற்ற நண்பர்களும் நடத்திக் கொண்டிருந்த ஒரு அமைப்பிற்கு தன்னுடைய தனி நாடகக் குழுவை வைத்து ஒரு நாடகம் நடத்தினார் கூத்தபிரான். கையில் காசில்லாததால் அதற்கு பணம் தராமல் நாட்களைக் கடத்திக் கொண்டே இருந்தார் அம்பி. அந்தப் பணத்தை வசூலிக்க கூத்தபிரான் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அம்பி வீட்டில் இருக்க மாட்டார். சோதான் இருப்பார்.அதனால் அவரிடம் சத்தம் போட்டுவிட்டுப் போவார் கூத்தபிரான். இது பல நாட்கள் தொடர்ந்தது.

அதற்குப் பிறகும் அவருக்கு பணம் வராததால் “பிராடு பசங்களா! இனிமேல் எக்காலத்திலும்  உங்களுக்கு நாடகம் எழுதித் தர மாட்டேன்” என்று ஆத்திரம் தீர கத்திவிட்டு அவர்களிடமிருந்து பிரிந்து விட்டார் கூத்தபிரான்.

அவர்களது நாடகக் குழுவிற்கு கதை எழுதிக் கொண்டிருந்த அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டதால் அடுத்து நாடகம் போட கதை இல்லாமல் சோவும் மற்றவர்களும்  தவித்தனர். பெரிய நாடக ஆசிரியர்கள் யாரிடமும் போய் நாடகம் எழுதித் தர கேட்கின்ற அளவிற்கு அவர்கள் நிதி நிலைமை அப்போது இல்லை.

அந்த சந்தர்ப்பத்தில் தான் ஏற்கனவே எழுதியுள்ள  ஒரு நாடகத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னார் சோ.

“ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் சேர்ந்த அன்று அவர்களது நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு நாடகம் எழுதி ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் நீட்டினேன். ஒரு ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாடகத்தை அவர் சரியாகப் படித்துக் கூட  பார்க்கவில்லை. எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டார். அந்த நாடகத்தின் கதை இன்னும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் சரி என்று சொன்னால் நான் வேண்டுமானால் அந்தக் கதையை நாடகமாக எழுதித் தருகிறேன்” என்றார் சோ.

அப்போது வேறு வழி இல்லாத காரணத்தால் எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து “ஈப் ஐ கெட்  இட் “ என்ற ஆங்கிலப் பெயரில் அந்த நாடகத்தை அவர்களுக்காக எழுதினார் சோ. அதுதான் அவர் எழுதிய முதல் மேடை நாடகம்.

அந்த நாடகத்தில் சோவுடன் ஜெய்சங்கர் முக்கிய வேடத்தில் நடித்தார். ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்று பின்னாளில்  புகழப்பட்ட ஜெய்சங்கர் அப்போது திரைப்படங்களில் நடிக்க  ஆரம்பிக்கவில்லை. அவர்களுடன் சோவின் தம்பி அம்பி, நீலு, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோரும் அந்த நாடகத்தில் நடித்தனர். அந்த நாடகத்தில் நடித்ததற்குப் பிறகுதான் ‘காத்தாடி’ என்ற பெயர் ராமமூர்த்தியுடன் இணைந்து கொண்டது.

தான் எழுதிய முதல் நாடகம் அந்த அளவு வரவேற்பைப் பெரும் என்று சோ கனவிலும்  எதிர்பார்க்கவில்லை. ஒரு வருடத்தில் இருபத்தி ஐந்து முறைக்கும் மேலாக அந்த நாடகம் நடத்தப்பட்டது. அதெல்லாம் அப்போது மிகப் பெரிய சாதனை.

“தமிழ் நாடக உலகில் நகைச்சுவையில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்திய நாடகம்” என்று அந்த நாடகத்தைப் புகழ்ந்தார் நாடக உலக ஜாம்பவானான எஸ்.வி.சஹஸ்ரநாமம்.

“யார் வேஷதாரி?” என்ற பெயரில் சோ எழுதியிருந்த மற்றொரு நாடகத்தை கொஞ்சம் மாற்றி  எழுதி தனது ஏ.ஜி.எஸ். அலுவலகத்தின் விழா ஒன்றில் நடத்தினார் கே.பாலசந்தர். அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நாம் எழுதிய நாடகத்தை இப்படி எல்லாம்கூட மாற்ற முடியுமா என்று அசந்து போன சோ அடுத்துத் தான் எழுதிய “ஒய் நாட்?” என்ற நாடகத்தை இயக்கித் தரும்படி கே.பாலசந்தரை அழைத்தார்.  அன்று பாலசந்தருக்கு அவர் அளித்த அழைப்புதான் பின்னர் சோவையே இயக்குநராக்கியது.

சோ  எழுதிய ‘ஒய் நாட்’ என்ற நாடகம் உட்பட மூன்று நாடகங்களை அவர்களது குழுவிற்காக இயக்கிய பாலசந்தர் அந்த நாடகங்களை இயக்கியபோது பெற்ற அனுபவங்கள் அவரால் மறக்க முடியாதவைகளாக அமைந்தன.

அபிராமபுரம் மேல்நிலைப் பள்ளியில்தான் அந்த நாடகங்களின் ஒத்திகைகள் எப்போதும் நடைபெறும். ஐந்து மணிக்கு ஒத்திகை என்றால் நாலரை மணிக்கே அங்கே  போய்விடுவார் பாலசந்தர். ஆனால், அந்த நாடகத்தில் நடித்த சோவின் நண்பர்கள் எல்லோருமே ஆறு மணிக்கு மேல்தான் ஒருவர் பின்  ஒருவராக வருவார்கள். அவர்களில் பாதி பேர் வந்த பிறகு ஆறரை மணிக்கு மெல்ல வருவார் சோ.

நாடக ஒத்திகையில் இப்படி என்றால் நாடக மேடையிலும் பாலசந்தர் சொல்கின்ற இடங்களில் அவர்கள் யாருமே நிற்க மாட்டார்கள். பாலச்சந்தருக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்பதோ அவர் சொல்வதைக் கேட்கக் கூடாது என்பதோ அவர்கள் எண்ணமல்ல. இயல்பாக அந்தக் குழு அப்படியே இயங்கிக் கொண்டிருந்ததால் தங்கள் போக்கை உடனடியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை  என்பதுதான் உண்மை.

நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் யாரும் தான் எழுதிய வசனங்களைத் தாண்டி  ஒரு வார்த்தைகூட  பேசக் கூடாது என்று பாலசந்தர் நினைப்பார். ஆனால் சோவைப் பொறுத்தவரையில்  குறிப்பிட்ட  ஒரு காட்சியில் ஒரு ஜோக் அடிக்க வேண்டும் என்று அவருக்குத்  தோன்றிவிட்டால் அந்த ஜோக்கை சொல்லாமல் இருக்கவே மாட்டார் அவர்.

நாடக ஒத்திகையின்போது அது போன்ற ஜோக்குகள் எதுவும் வேண்டாம் என்று பாலசந்தர் கண்டிப்போடு சொல்லும்போது அவரிடம் சரியென்று ஒப்புக் கொண்டு விட்டு  பின்னர் நாடகம் நடக்கும்போது அந்த ஜோக்கை சொல்லி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சோ.

அப்படி அவர் அடிக்கின்ற ஜோக்குகளுக்கு  பலத்த கை தட்டல்கள் கிடைக்கும் என்றாலும் அந்தக் காட்சி எப்படிப்பட்ட  தாக்கத்தை ரசிகர்களிடம் உண்டு பண்ண வேண்டும் என்று பாலசந்தர் திட்டமிட்டிருந்தாரோ அதை அந்த ஜோக்குகள் பெரிதாக பாதித்துவிடும். ஆனால், சோவோ அவர்களது நண்பர்களோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள்.

நாடகம் நடக்கும்போது இப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் நடக்கக் கூடாது என்று அவர்களுக்கு பல முறை சொல்லிப் பார்த்த பாலசந்தர் ஒரு கட்டத்தில் கடும் கோபத்தோடு அவர்களை எச்சரித்தார். ஆனால் அதற்குப் பிறகும்  சோவிடமும்  அவரது  குழுவினரிடமும் எந்தவிதமான மாறுதலும்  இல்லை.

இனி அவர்களைத் திருத்தவே  முடியாது என்று  ஒரு கால கட்டத்தில் முடிவுக்கு வந்த பாலசந்தர் “இதற்கு மேலும் உங்கள் நாடகத்தை என்னால் இயக்க முடியாது” என்று அவர்களிடம் சொல்வதற்கு பதிலாக “என்னுடைய நாடக வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. அதனால் நீங்கள் வேறு இயக்குநரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம்  சொல்லிவிட்டு அவர்களைக்  காயப்படுத்தாமல்  அவர்களது நாடகங்களை இயக்கும் பணியிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

விவேகா பைன் ஆர்ட்சை பொறுத்தவரையில் யார் விலகினாலும் அவர்களது பொறுப்பையும் சேர்த்து கவனிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த சோ, பாலசந்தர் விலகியவுடன் நாடகங்களை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

பாலசந்தரைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு பர்பெக்க்ஷனிஸ்ட். காட்சிக்கான அரங்க அமைப்பு, ஒலி, ஒளி, பின்னணி இசை தவிர  நடிகர்கள் எங்கு நின்று வசனம் பேச வேண்டும். எந்த வசனத்தில் திரும்ப வேண்டும் என்பதில்கூட கவனம் செலுத்துவார் அவர். ஆனால் சோவைப் பொறுத்தவரையில் இவைகள் எதிலுமே அவர் கவனம் செலுத்த மாட்டார். அவரைப் பொறுத்தவரையில் ஏற்று நடிக்கின்ற  பாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிகர்கள் வசனம் பேசி விட்டால் போதும்.

பாலசந்தர் விவேகா பைன் ஆர்ட்சை விட்டு விலகிய பிறகு அவர்களது நாடகங்கள் அப்படித்தான் நடந்தன. ஆனாலும் அந்த நாடகங்களுக்கு அசாத்திய வரவேற்பு கிடைத்தன.

‘சம்பவாமி யுகே யுகே’ என்ற பெயரிலே அவர் எழுதி இயக்கிய நாடகம் சோவிற்கு  மிகப் பெரிய ஒரு பெயரைப் பெற்றுத் தந்த நாடகமாக அமைந்தது. ஆனால், அந்த நாடகத்தில் அவர் சந்தித்த பிரச்னைகள் கணக்கிலடங்காது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News