தமிழ்ச் சினிமா வரலாறு – 46 – நாடக ஆசிரியரைப் பாராட்ட அவரது வீடு தேடி சென்ற கலைவாணர்..!

பிரபல நாவலாசிரியையான வை.மு.கோதை நாயகி எழுதிய ‘தயாநிதி’ என்ற  நாவலை ‘சித்தி’ என்ற பெயரிலே படமாக எடுக்க முடிவு செய்த ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவையும், ‘நாட்டியப் பேரொளி’ பத்மினியையும் ஒப்பந்தம் செய்தார்.

அந்தப் படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ், விஜயநிர்மலா என்று பலரும் நடித்தார்கள் என்றாலும்  துவக்க நாளன்று ‘தினத்தந்தி’யில் கொடுத்த இரண்டு பக்க விளம்பரத்தில்  எம்.ஆர்.ராதாவுக்கும், பத்மினிக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் அவர்.

அந்த விளம்பரம் அவ்வளவு பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று கோபாலகிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை.

“பத்மினியை ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள். எம் ஆர் ராதாவுக்கு  மார்க்கெட்டே இல்லை அத்துடன் ஜோடிப் பொருத்தமும் சரி இல்லை. அதனால் இந்தப் படம் கே.எஸ்.ஜி.க்கு பெரிய தோல்விப் படமாகத்தான் அமையப் போகிறது” என்று பேசாத திரையுலகினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையே அன்றிருந்தது.

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  எம்.ஆர்.ராதாவை வைத்து அந்தப் படத்தை எடுத்து முடித்தார் என்றால் அதற்குக் காரணம்,  அவரது வாழ்க்கையில் நடந்த இரு முக்கியமான சம்பவங்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மிகவும் கவர்ந்த நடிகர் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். அவரைச்  சந்திக்க பல முறை முயன்றும் கோபாலகிருஷ்ணனால்  அவரைச்  சந்திக்க  முடியவில்லை. அப்படிப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாள் கே.எஸ். கோபாலகிருஷ்ணனை சந்திக்க அவருடைய வீட்டைத் தேடி வந்தார் என்றால் அதற்குக் காரணமாயிருந்தவர்  எம்.ஆர்.ராதா.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘எழுத்தாளன்’ என்ற நாடகத்தை தனது ‘சக்தி நாடக குழு’வின் சார்பில்  சென்னையில் நடத்த விருப்பப்படுவதாகச் சொல்லி அதற்கான அனுமதியை கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார் நடிகர் எஸ்.ஏ.நடராசன். அவர்தான் ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் ‘வாராய் நீ வாராய்’ என்று பாடி நடித்தவர்.  அவரது வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு  அனுமதி அளித்தார் கோபலகிருஷ்ணன்.

எம்.என்.கண்ணப்பா-ஜி.சகுந்தலா ஆகிய இருவரும் கதாநாயகனாகவும், நாயகியாகவும் நடிக்க எஸ்.ஏ.நடராஜன் வில்லனாக நடித்த அந்த நாடகம் சென்னை ஒற்றைவாடை  தியேட்டரில் நடைபெற்றபோது யாரும் எதிர்பாராதவிதமாக  எம்.ஆர்.ராதா அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார்.

நாடகம் முடிகின்ற தருணத்தில் அவரை மேடைக்கு அழைத்து நாடகம் பற்றி அவருடைய  கருத்து என்ன என்று பேசச்  சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்றெல்லாம் எஸ்.ஏ.நடராஜனும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் மேடைக்கு பின்னால் நின்று  பேசிக் கொண்டிருந்தபோது… அங்கே வந்த எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழு நிர்வாகி, நாடகம் முடிந்தவுடன் எம்.ஆர்.ராதா பேச விரும்புவதாக நடராஜனிடமும், கோபாலகிருஷ்ணனிடமும் கூறினார். அதைக்  கேட்டவுடன் அவர்கள் இருவரும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை என்றுதான் கூற வேண்டும்.

நாடகம் முழுவதையும் பார்த்துவிட்டு எம்.ஆர்.ராதா மேடை ஏறியபோது அவருடைய ஒரு கையில்  பீடியும்,  இன்னொரு கையில் தீப்பெட்டியும் இருந்தது. அவை  இரண்டையும் ரசிகர்கள் முன்பாகக் காட்டிய அவர் “நான் இந்த நாடகத்தைப் பற்றி என்ன சொல்லப் போறேன்னு தெரிஞ்சிக்க நீங்க எல்லோரும் ஆவலோடு இருக்கிறது எனக்குத் தெரியுது. என் கருத்தைச்  சுருக்கமாக சொல்வதற்காகத்தான் இடது கையில் தீப்பெட்டியையும் வலது கையில் ஒரு பீடியையும் உங்ககிட்ட காட்டினேன்.

இந்த நாடகத்தின் முதல் காட்சி தொடங்கியபோது பீடி குடிக்க வேண்டும் என்று இந்த பீடியைக் கையில் எடுத்தேன். நாடகத்தின் விறுவிறுப்பையும் அதில்  இடம் பெற்ற அற்புதமான காட்சிகளையும் புரட்சிகரமான கருத்துக்களையும் ரசித்துக் கொண்டிருந்த நான்  நாடகம் முடியும் வரை பீடி பிடிக்கவே மறந்துவிட்டேன்.  இதற்கு  மேலேயும் இந்த நாடகம் பற்றி  நான் சொல்ல  வேண்டுமா?” என்று அவர் சொல்லி முடித்தபோது  அந்த நாடகக் கொட்டகையே அதிரும்படி ரசிகர்கள்  கை தட்டினார்கள்.

எம்.ஆர்.ராதா அந்த அளவு மனம் விட்டுப் பாராட்டுவார் என்று கோபாலகிருஷ்ணன் எதிர்பார்க்கவேயில்லை. அதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார் அவர்.

அவருக்காக இன்னொரு ஆனந்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கும் விஷயம்  அப்போது அவருக்குத் தெரியாது.

மறுநாள் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு கதையைப் படித்துக் காட்டி அதைப் பற்றி விவாதித்துவிட்டு  சாந்தோமில் இருந்த  தனது அறைக்கு அவர்   திரும்பியபோது அந்த  அறையில் இருந்த அவருடைய நண்பர்  “உங்களைப் பார்க்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வந்து இருந்தார். இவ்வளவு நேரம்  காத்திருந்துவிட்டு இப்போதுதான் புறப்பட்டுச் சென்றார்” என்று  கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.

நண்பர் சொன்னதை கே.எஸ்.ஜி. முதலில் நம்பவில்லை. “பகல் கனவு ஏதாவது கண்டீர்களா..?  என்னைப் பார்க்க கலைவாணர் வருவதாவது..? அவரைப்  போல வேறு யாரையாவது   பார்த்து இருப்பீர்கள்…” என்றார். 

கோபாலகிருஷ்ணன் அப்படிச்  சொன்னவுடன்  “எனக்கென்ன பைத்தியமா?” என்று ஆத்திரத்துடன்  கேட்ட  அந்த நண்பர் ” வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணனேதான். தன்னுடைய 5666 வாக்சால் காரில்தான் அவர் வந்தார். அறைக்குள்ள  வந்து உட்கார்ந்து எங்களிடம் நீண்ட நேரம் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பும்போது அவருடைய மாம்பலம் விட்டின் டெலிபோன் நம்பரை எழுதிக் கொடுத்த அவர் நீ வந்தவுடன் அந்த நம்பருக்கு போன் செய்தால் உன்னை அழைத்துப் போக கார் அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டுப் போனார்…” என்று அழுத்தம் திருத்தமாகக்  கூறவே  கலைவாணர் இருந்த வெங்கட்ராமன் தெருவுக்கு உடனே கிளம்பினர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

அவர் போனபோது கலைவாணர் விட்டின் காம்பவுண்ட்  கேட் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே போகலாமா வேண்டாமா என்று கோபாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோது  வீட்டுக்குள்ளிருந்து வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவியபடியே வெளியே வந்த என்.எஸ்.கிருஷ்ணன் வெளியே நின்று கொண்டிருந்த டிரைவரைப் பார்த்து “டேய் ராஜப்பா, நீ உடனே காரை எடுத்துக்கிட்டு சாந்தோமுக்குப் போய் அந்த கோபாலகிருஷ்ணனை அழைச்சிக்கிட்டு வா. அவன் வீட்டில் இல்லேன்னா அங்கேயே காத்திருந்து அவன் வந்ததும் அவனை இங்கே  கூட்டிக்கிட்டு வா..” என்றார்.

அவர் அப்படிச்  சொன்னவுடன் தைரியம் வரப் பெற்ற கோபாலகிருஷ்ணன் நேராக வீட்டுக்குள் சென்று “அண்ணே நான்தான் கோபாலகிருஷ்ணன்” என்றபடி என்.எஸ்.கே. முன்னால் போய் நின்றார்.

அவரை ஆச்சர்யமாக பார்த்த கலைவாணர் “நீதானா அந்த கோபாலகிருஷ்ணன்..? வா..  வா…  உன்னுடைய ‘எழுத்தாளன்’ நாடகத்தைப் பார்த்த எம்.ஆர்.ராதா ராத்திரி பூரா அதைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாண்டா. அந்த அளவுக்கு வேற யாரைப் பத்தியும் ராதா இதுவரைக்கும்  என்கிட்டே  புகழ்ந்து பேசினதே கிடையாது. பொதுவாக எல்லோரையும் திட்டிப்  பேசும் ராதா உன்னை தூக்கி வைச்சிப் பேசினது எனக்கே ஆச்சர்யமாக  இருந்தது. அதனால நீ எழுதின ‘எழுத்தாளன்’ நாடகத்தை நீயே  படிக்கக் கேட்கணும் என்பதற்காகத்தான் உன்னைத் தேடி வந்தேன்…” என்றார்.

எம்.ஆர்.ராதா தன்னைப் பாராட்டிய சந்தோஷம், என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய நாடகத்தைக் கேட்க ஆசைப்படுகின்ற சந்தோஷம் ஆகிய இரண்டும் ஒன்றாக சேர்ந்து கொள்ள அங்கேயே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பின்னர் அந்த நாடகத்தைப் படித்தார் கோபாலகிருஷ்ணன்.

நாடகத்தின் வசனங்களை முழுவதுமாகக் கேட்ட பிறகு “ராதா உன்னைப் பாராட்டியது நியாயம்தான். ரொம்பப் பிரமாதமாக எழுதி இருக்கே”  என்ற கலைவாணர் “நீ ரொம்பப் பெரிய ஆளாக வருவாய்” என்று ஆசிர்வதித்தது மட்டுமின்றி “இனிமேல் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் நீ எப்போது வேண்டுமானால் இங்கே வரலாம். யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை..” என்றார்.

கலைவாணர் நாடகத்தைப் பாராட்டியதைவிட எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்க வரலாம் என்று சொன்னதில் கோபாலகிருஷ்ணன் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

அப்படி கலைவாணரிடம் தன்னைப் பற்றி உயர்வாக கூறிய எம்.ஆர்.ராதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த காரணத்தினால்தான் ‘சித்தி’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அவரைப் போட்டு படம் எடுத்தபோது எழுந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் அவர்.

எல்லோரது விமர்சனங்ளையும் மீறி ‘சித்தி’ திரைப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. அது மட்டுமின்றி எம்.ஆர்.ராதாவைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாத்திரத்தை அவளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று பாராட்டையும் பெற்றது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரையில் படத்தின் வெற்றியைவிட எம்.ஆர்.ராதாவிற்கு கிடைத்த பாராட்டுக்கள்தான் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. 

கலைவாணரை சந்திக்கவும் அவரோடு பேசவும் தனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நடிகவேளுக்கு உரிய முறையில் தனது நன்றியினைத் தெரிவித்துவிட்ட  ஆனந்தத்தோடு அதற்கடுத்து அடுத்தப் பட வேலைகளில் இறங்கினார் அவர்.

(தொடரும்)