Friday, April 12, 2024

“மாஸ்டர்’ படத்திற்காக ‘ஈஸ்வரன்’ வெளியாவதைத் தடுக்கிறார்கள்” – டி.ராஜேந்தர் ஆவேசம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகம், கடிதம் கொடுத்தமைக்கு நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் சூழலில் சிம்பு முன்பு நடித்திருந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்பு கொடுக்க வேண்டியிருப்பதால், ‘ஈஸ்வரனை’ வெளியிடக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் பற்றியும், இந்த நஷ்ட ஈட்டு விவகாரங்கள் பற்றியும் சிம்புவின் சார்பிலும், ‘ஈஸ்வரன்’ படக் குழு சார்பிலும் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அவர் பேசும்போது. “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட வெளியிட்டீன்போது சிம்பு தன்னுடைய சம்பளத்திலேயே மூன்றரை கோடியை விட்டுக் கொடுத்ததினால்தான் அந்தப் படமே வெளியானது.

ஒரு படம் வெளியாகி அந்தப் படம் தோல்வியடைந்தால் அதற்கு படத்தில் நடித்த ஹீரோ எப்படி பொறுப்பாவார்..? அந்தப் படத்தின் விநியோக முறை என்ன..? எத்தனை தியேட்டர்களில் வெளியிட்டார்கள்..? யார், யாருக்கு எவ்வளவு தொகையைப் பிரித்துக் கொண்டார்கள்…? இதையெல்லாம் எந்த ஹீரோ கேட்டுக் கொண்டிருப்பார்..? அது அந்தத் தயாரிப்பாளரின் பொறுப்பு.. வேலை..

ஆனால், அந்தப் படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சிம்புதான் என்று சொல்லி எல்லாப் பழியையும் தூக்கி சிம்பு மீது போட்டுவிட்டார்கள். அப்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலும், கதிரேசனும் சேர்ந்து “சிம்பு இனிமேல் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இரண்டே முக்கால் கோடியை நஷ்ட ஈடாக மைக்கேல் ராயப்பனுக்கு வழங்க வேண்டும்” என்று ஒருதலைப்பட்சமாக கட்டப் பஞ்சாயத்து செய்து சொன்னார்கள். அப்போது என்னிடமோ, சிம்புவிடமோ அவர்கள் கருத்தே கேட்கவில்லை. இப்படி ஒரு அநியாயம் இந்தியாவில் எந்த ஒரு சினிமா துறையிலாவது நடந்திருக்குமா..?

இவர்களின் இந்த கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பை எதிர்த்து மைக்கேல் ராயப்பன் மீதும், அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் மீதும், கதிரேசன் மீதும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். அந்த வழக்கு இப்போதுவரையிலும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்.. கோர்ட்டில் ஒரு வழக்கு இருக்கும்போது அதை கண்டு கொள்ளாமல் அந்த வழக்குடன் தொடர்புடைய விஷயத்திற்காக இப்படியொரு நோட்டீஸை தயாரிப்பாளர் சங்கம் கியூபுக்கு எப்படி அனுப்பலாம்..? இது சட்டப்படி பார்த்தால் நீதிமன்ற அவமதிப்பாகும்..!

அவர்கள் சிம்புவையும், என்னையும் மட்டும் குறி வைக்க என்ன காரணம்.. நான் சென்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம்.

நான் அனைத்தையும் கேள்வி கேட்பேன். விஷால் சங்கப் பணத்தை சுத்தமாக சூறையாடிவிட்டுப் போய்விட்டார். இதை நான் தட்டிக் கேட்டேன். அதனால் என் மீது கோபம்.

இப்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முறைகேடுகளை செய்துதான் பொறுப்புக்கு வந்தார்கள். கள்ள ஓட்டு போட்டார்கள். இதை எதிர்த்தும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளேன். இதெல்லாம் சேர்ந்துதான் என் மீது அவர்களுக்கு கோபம் அதிகமாகி, என் மகனின் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள்.

மேலும், ‘மாஸ்டர்’ படம் பெரிய பட்ஜெட் படம் என்பதாலேயே ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருந்தால் அந்த காம்ப்ளெக்ஸில் இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ‘மாஸ்டர்’ படத்தை மட்டுமே வெளியிட வேண்டும் என்று அராஜகம் செய்கிறார்கள்.

ஏன் என் மகன் நடிக்கும் படம் வெளியாகக் கூடாதா..? ஜெயிக்கக் கூடாதா..? அவர்களுடைய நோக்கம் எப்படியாவது என் மகன் நடித்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகவே கூடாது என்பதுதான். இதையெல்லாம் தாண்டி.. எப்பாடுபட்டாவது ‘ஈஸ்வரன்’ தியேட்டருக்கு வந்தே தீரும்..” என்று உறுதியாகச் சொன்னார் டி.ராஜேந்தர்.

- Advertisement -

Read more

Local News