Friday, April 12, 2024

ஆளும் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்த நடிகைகள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடந்து முடிந்த கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற சுகாதார அமைச்சரும், கேரளத்து மக்களிடையே பெரும் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கே.கே.சைலஜா டீச்சருக்கு இம்முறை அமைச்சர் பொறுப்புத் தரப்படவில்லை. ஆனால், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணியின் கொறடா என்ற பொறுப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள்.

புதிய சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் என்ற பெண்மணி பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆனாலும், ஷைலஜா டீச்சருக்கு அமைச்சர் பொறுப்பு தராததற்காக மலையாள நடிகைகள் பலரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடும் கண்டனம் விடுத்துள்ளனர். இதற்காக #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டேகில் குறிப்பிட்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

நடிகை பார்வதி திருவோத்து தனது டிவீட்டர் பக்கத்தில், “அமைச்சரவையில் சைலஜா டீச்சருக்கென ஓர் இடம் உள்ளது. நம் மாநில மக்கள் அவரது சிறந்த தலைமையின் கீழ் இருக்க உரியவர்கள். இதற்கு எந்த சப்பைக் கட்டும் கிடையாது. மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவது கட்சியை ஒரு கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளுகிறது. உடனடியான, திறமையான ஆட்சியைத் தவிர இப்போதைய முக்கியத் தேவை என்ன…? எங்கள் டீச்சரை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘இப்போது இல்லையென்றால் பின் எப்போது அவர் நம் மாநிலத்துக்குத் தேவைப்படுவார்?” என்று நடிகை ரம்யா நம்பீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் ஒருவர் சைலஜா. அவருக்கு இந்தத் தொற்றுக் காலத்தில் அமைச்சரவையில் இடமில்லையா…? என்னதான் நடக்கிறது பினராயி விஜயன்?” என்று நடிகை மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.

நடிகை ரீமா கல்லிங்கலும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவுக்கு எதிராகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றி முகநூலில் எழுதுகையில், “மிகப் பெரிய வெற்றியையும், 5 ஆண்டு காலம் உலகத் தரம் வாய்ந்த சேவையையும் வழங்கியவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாவில்லை என்றால் எப்படி..? இந்த கேள்வி உங்களுக்காக கே.கே.ஷைலஜா டீச்சர். ஒரு மனித அடையாளத்தின் முகமாக நீங்கள் அந்தக் கட்சியில் இருப்பதற்காகவும், உங்களது கடின உழைப்புக்காகவும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கர்ணன்’ பட நாயகியான ரஜிஷா விஜயன் இது பற்றி முகநூலில் எழுதுகையில், “புதிய தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பது ஒரு நல்ல சிந்தனையாகும், ஆனால் நம் அரசு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பேரழிவுகளின்போது எங்களை நிர்வகிப்பதிலும் மீட்பதிலும் பெரும் பங்களிப்பைக் கொண்டவர். அவர் இன்னும் தகுதியானவர்தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிப் பேசிய ஷைலஜா டீச்சர், “இது கட்சி எடுத்திருக்கும் முடிவு. அதற்குக் கட்டுப்பட வேண்டியது எனது கடமை. கட்சி என்ன சொல்கிறதோ.. அதைத்தான் என்னால் செய்ய முடியும். என் மீது அன்பு வைத்திருந்து பேசியவர்களுக்கு நன்றி..” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News