நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.
அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.
படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.
ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.
அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.