அருப்புக்கோட்டை சங்குப்பட்டி காவல் நிலைய ‘சரகத்தில்’ ஒரு நபர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பக்கம் வரும் அப்பாவி இளைஞன், அந்த சடலத்தைப் பார்க்கிறான். அருகில் கிடந்த மொபைல் போனை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறான்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையிலேயே (!), மரித்த நபர் அங்கமெல்லாம் தங்கமாக பளபளவென உலவிய நபர் என்பது தெரிய வருகிறது.
ஆக, கொலை செய்யப்பட்ட நபர் அணிந்திருந்த 30 பவுன் நகையை, அந்த அப்பாவி இளைஞன் செல்போனை மட்டும் ஒப்படைத்திருக்கிறான் என முடிவு கட்டுகிறது காவல்துறை.
அவனிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டுவர, விசாரணையை அடித்து துவைக்கிறார்கள்.
போலீஸ் பிடியில் இருந்து அந்த இளைஞன் தப்பித்தானா, நகைகளை திருடியது யார் என்பதே மீதிக்கதை.
பிரேம்ஜி நடிப்பை ரசிப்பவர்களைவிட, எரிச்சலடைபவர்கள் சதவிகிதம் அதிகம் என்பது கருத்துக்கணிப்பு. ஆனால் அவரது எரிச்சலூட்டும் அப்பாவித்தனத்துக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்த படத்தில். ஆகவே ரசிப்பவர்களின் சதவிகிதம் எகிறும்.
நாயகி ஸ்வயம் சித்தா, கதாநாயகனின் சகோதரி ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்டோர் இயல்பாக நடித்து உள்ளனர். நீதிபதி, கு. ஞானசம்பந்தன் வழக்கம்போல மூக்குவிடைக்க பேசி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.
போலீஸ் சித்தன் மோகன், வாயாடி வயோதிக அம்மா இருவரும் கூடுதலாக கவனத்தை ஈர்க்கிறார்கள்.
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், ‘அது எங்க ஏரியா இல்லே.. ஸ்டேசன் உள்ளே வராதே’ என போலீசார் விரட்டுவதும் அதுவே மாமூலையோ, பறிமுதல் செய்யப்பட்ட பொருளையே பங்குபோட்டுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
அதிலும் குறிப்பாக, காவல் துறையினரின் மனித உரிமை மீறல்களை.. அவை எளிய மனிதர்களையே குறிவைப்பதை மிக இயல்பாக சொல்லி இருக்கிறார்.