“ரஜினியை எதிர்த்து புகைப்படம் எடுக்காமல் படப்பிடிப்பு செட்டில் இருந்து வெளியேறினேன்…” என்று ஒரு உண்மைக் கதையைச் சொல்லியிருக்கிறார் புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.
அவர் இது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘சிவா‘ படத்தில் புகைப்படக் கலைஞனாகப் பணியாற்றினேன்.
அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் சாயந்தர வேளையில் ‘இரு விழியின்’ பாடலின் நடனக் காட்சி ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினியும், ஷோபனாவும் சூப்பரான காஸ்ட்யூம்ஸ் போட்டிருந்தாங்க.
ஒரு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முடிந்ததும் “ரஜினி ஒரு ஸ்டில்..” என்று ரஜினியிடம் கேட்டேன். ரஜினி என்ன நினைத்தாரோ.. திடீரென்று கோபத்துடன் “என்ன… என்ன… உங்களுக்கும் ஆடிக் காட்டணுமா…?” என்று கோபத்துடன் கேட்டார்.
இதைக் கேட்டதும் எனக்கும் சட்டென்று கோபம் வந்தது. பட்டென்று கேமிராவை மூடி கையில் எடுத்துக் கொண்டு, அப்படியே செட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். ஏவி.எம்.மின் 8-வது ப்ளோரில் இருந்து 1-வது ப்ளோர்வரையிலும் நடந்து வந்தேன்.

‘இந்தப் படத்துக்கு இன்னியோட மங்களம் பாடிர வேண்டியதுதான். இனி இந்தப் படத்துல வேலை பார்க்கக் கூடாது’ன்னு நினைச்சுக்கிட்டே நடந்துக்கிட்டேயிருந்தேன்.
அப்போது ரஜினியின் உதவியாளரான ஜெயராமன் என்னைத் தேடி ஓடி வந்தார். “ஸார் கூப்பிடுறாரு…” என்று என்னை அழைத்தார். நான் திரும்பவும் ரஜினியைப் பார்க்கப் போனேன். செட்டுக்குப் பின்னாடி சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
“என்ன கோச்சுட்டீங்களா..?” என்றார். “ஆமாம்” என்றேன். “என்கிட்ட பெர்ஸனலா கோபப்பட்டா எனக்கு ஒண்ணுமில்லை. ஆனால் என் தொழில்ல ஏதாவது குறுக்கீடு வந்தா எனக்குக் கோபம் வரும்..” என்றேன்.. “ஸாரி.. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் கோபமாயிருச்சு…” என்றார் ரஜினி.
ஆனா, அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. “ரஜினிக்கு சாயந்தரமானா தண்ணியடிக்கணும். அந்த நேரத்துல யாராச்சும் லேட் செஞ்சா பயங்கர கோபம் வரும்”ன்னு அந்தப் படத்தோட இயக்குநர் அமீர்ஜான் சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன்.
இந்தப் பிரச்சினை அதோடு முடிஞ்சிருச்சு.. என்னிக்குமே ரஜினி அப்படி கோபப்பட மாட்டாரு. அன்னிக்கு ஏதோ ஒண்ணுன்றதால கோபமாயிட்டாருன்னு நினைக்கிறேன்.
பட்.. ரஜினி நிஜத்துல நல்ல மனுஷன். எல்லா விஷயத்துலேயும் பெர்பெக்ட்டான நபர். என்கிட்ட ஸ்டில்ஸ் எடுக்க வர்ற எல்லார்கிட்டேயும் நான் சொல்றது ரஜினி மாதிரி கண்ணாடி முன்பு நின்னு நீங்களே நடிச்சுப் பார்த்து உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்குங்கன்னு.
அவரும் அதை்ததான் செய்வாரு. எவ்வளவு பெரிய நடிகரான பின்னாடியும்.. சில காட்சிகள்ல நடிக்குறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துக்குவாரு. அப்போதான் ஷாட்ல நல்லா வரும்ன்னு நினைப்பாரு. இதைத்தான் நடிகனா ஆகணும்ன்னு நினைக்கிறவங்களுக்கும் நான் அடிக்கடி சொல்லுவேன்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.