சூப்பர் ஸ்டார் ரஜினி சத்தமே இல்லாமல் செய்திருக்கும் பல மனிதாபிமான உதவிகளைப் பற்றிய செய்திகள், இப்போதுதான் சோஷியல் மீடியாக்களின் உதவியால் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது.
பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய ராமதுரை ‘உழைப்பாளி’ படத்தின்போது ரஜினி செய்த மிகப் பெரிய தானம் பற்றிய ஒரு செய்தியை இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யு டியூப் தளத்தில் இடம் பெறும் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமதுரை இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
“நான் ‘உழைப்பாளி’ படத்தில் இயக்குநர் பி.வாசுவிடம் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினேன். அந்தப் படத்தின் பூஜையின்போது படத்தின் தயாரிப்பாளரான பி.நாகி ரெட்டி கை நிறைய தங்கக் காசுகளை படத்தின் நாயகனான ரஜினியின் கைகளில் கொடுத்தார். ஒவ்வொரு காசும் ஒரு பவுன் தேறும்..!

ரஜினி முதலில் அதை வாங்க மறுத்துவிட்டார். நாகி ரெட்டியோ, “எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போதும் அவருக்கு நாங்கள் இதேபோல் கொடுத்தோம். இது எங்களது அன்புப் பரிசு. அவசியம் நீங்க வாங்கிக்கணும்..” என்றார்.
பெரியவரின் பேச்சைத் தட்ட முடியாமல் அன்றைக்கு அந்தத் தங்கக் காசுகளை பெற்றுக் கொண்டார் ரஜினி.
ஆனால், அதே ‘உழைப்பாளி’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அந்தத் தங்கக் காசுகளை செட்டுக்கு கொண்டு வந்தார் ரஜினி.
அன்றைக்கு அந்த செட்டில் இருந்த அத்தனை தொழிலாளர்களையும் அழைத்து ஆளுக்கொரு தங்கக் காசினை கொடுத்தார். அப்போது என்னைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் ராமநாதனுக்கும் ஒரு காசு கொடுத்தார். அப்படியே நாகி ரெட்டியார் கொடுத்த மொத்தக் காசுகளையும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் ரஜினி..” என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை.