Friday, April 12, 2024

“ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம், நடிகைகள் ராதிகா, லிஸி மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “உயிரே உறவே வணக்கம். தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதைத்தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை; நடிகனும் இல்லை.

நான் முதன்முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்னபோது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி, கேவி அழுதார். ‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார்.

என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.

நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கெல்லாம் சென்று வெளியில் நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரியதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.

எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்தபோது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்தபோது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய், தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார்.

இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டுச் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது பற்றிப் பலரும் கேட்டார்கள்.

ஸ்டாலின் அரசியலில் அந்தப் பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். நடுவில் ட்ராபிக் செல்கிறது. அரசியல் வேறு நட்பு வேறு. முதல்வருக்கும் எனக்குமான நட்பு. கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.

எனக்கு திரையுலகத்தில் போட்டியாளர் ரஜினி. ஆனால் இன்றுவரையிலும் நாங்கள் நண்பர்கள். இளம் வயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும். எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். இப்போதுவரையிலும் நானும், ரஜினியும் நல்ல நட்போடுதான் இருக்கிறோம், நீங்கள் ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறீர்கள்.

என் காரை தொட்டுப் பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்குத்தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும். விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்ததுபோல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ, அது போல விஜய் சேதுபதியும் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் ‘பத்தல பத்தல’ வெற்றி இதுபோல் எனக்கு இதுவரையிலும் கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே இந்தப் பாடலை பாடி இருக்கிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல; நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே.

நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்..! இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

நான் political cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம்தான்.

அப்படியென்றால், “இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா..?” என்று கேட்காதீர்கள். நான் இந்தியும், தமிழும் சுமாராகத்தான் பேசுவேன். எந்த மொழியையும் “ஒழிக” என்று சொல்ல மாட்டேன். ஆனால், “தமிழ் வாழ்க” என்று சொல்வது என் கடமை.

இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், நம் தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது.

இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம், இதில் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொடுத்த தம்பி சூர்யாவுக்கு நன்றி..” என்று படக் குழுவில் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

- Advertisement -

Read more

Local News