விக்ரம் சுகுமார் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, கண்ணன் ரவி, பிரபு ,இளவரசு ,தீபா ,தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இராவணக்கோட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற கிராமம்.. வழக்கம்போல், சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் முன்னுதாரணமான ஊர்.
இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து நல்லது செய்துவருகிறார் பிரபு. ஊரின் மேலத்தெருவை சேர்ந்த ‘மேல் சாதி’க்காரர் இவர். இவரது நண்பர் இளவரசு, கீழத்தெருவைச் சேர்ந்த ‘கீழ்ச்சாதிக்காரர்’.
இளவரசின் சாதிக்காரர்கள் சிலர், சதி செய்து, இரு சாதி மக்களையும் பிரிக்கிறார்கள். இடையில் கருவேல மர பிரச்சினையும் வருகிறது.
உயிருக்கு உயிரான நண்பர்களான, பிரபுவும் இளவரசும் கொல்லப்படுகிறார்கள். அதன் பிறகு ஊர் மக்களை சாந்தனு எப்படி எதிரிகளை பழிவாங்கினார் என்பதுதான் கதை.
சாந்தனு பாக்யராஜ் சிறப்பாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி மோதல் காட்சிகளில் ஆக்ரோசம் காட்டுவதிலும் கவர்கிறார். அதே போல, தனது உயிர் நண்பன் தவறான புரிதலோடு பிரிவதை நினைத்து வருந்தும் காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகி கயல் ஆனந்தி எப்போதும் போல் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
சாந்தனுவின் நண்பனாக வந்து பிறகு பிறியும் கதாபாத்திரத்தில் சஞ்சய் சரவணன் அற்புதமான நடிப்பை அளித்து உள்ளார். பாசம் காட்டும் காட்சிகளாகட்டும், வன்மைத்தை வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும் சிறப்பு!
கை இல்லாத மாற்றுத்திறனாளியாக வரும் வில்லன் நடிகர் அசத்துகிறார். பிரபு, இளவரசு நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்ல.
மாவட்ட ஆட்சியராக ஷாஜி, எம்.எல்.ஏ.வாக அருள்தாஸ், அமைச்சராக பிஎல். தேனப்பன், நாயகனின் சகோதரியாக தீபா ஷங்கர் உள்ளிட்டோரின் நடிப்பும் நேர்த்தி!
மொத்தத்தில் அனைவருமே பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை ஓகே.ரகம்.
ஆனால் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா என்பதுதான் கேள்வி.
சாதியை வைத்து அரசியல் தலைவர்கள் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். இது தேவையான விசயம்தான்.
ஆனாால்.. ஆரம்பத்திலேயே பிரபு தலையைச் சுற்றி, ராவணன் போல பல தலைவர்களின் படங்களை வைத்தோதே, படம் எப்படி இருக்குமோ என்கிற பயம் ஏற்பட்டு விடுகிறது. அதே போல, அற்புதமாக நடிக்கும் சுஜாதாவை, மார்டன் டிரஸ் என ஏதோ போட்டு, அவர் வாட் ஈஸ் ட்ரீ என கேட்பதை எல்லாம் காமெடி என எடுத்து வைத்து இருக்கிறார்.
பதினாறு பட்டிக்கு பெரியவர் என்கிறார்கள் பிரவுவை. அவரது மரணத்துக்கு பத்து பதினைந்துபேர்தான் வருகிறார்கள். ஊரில் கலவரம் என்கிறார்கள்.. அதே போல பத்து பதினைந்து காவலர்கள்தான் வருகிறார்கள்.
இப்படி லாஜிக் மீறல் படம் முழுதும் நிறைந்திருக்கிறது.
நல்ல நடிகர்கள், நல்ல டெக்னீசியன்கள் கிடைத்தும் தனக்கான வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டு இருக்கிறார்.
அடுத்த படத்தில் இதை சரிகட்டுவார் என நம்புவோம்.. வாழ்த்துவோம்!