‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக அந்தப் படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மறக்கவியலாத ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும், ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்துடன், ஐ மேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என்று படக் குழுவினர் இன்றைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும், ஐ மேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.