Thursday, July 7, 2022
Home Movie Review ஓ மை டாக் - சினிமா விமர்சனம்

ஓ மை டாக் – சினிமா விமர்சனம்

அருண் விஜய் ஊட்டியில் இருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். தனது மனைவி மகிமா, மகன் அர்னவ் மற்றும் தந்தை விஜய்குமாருடன் வசித்து வருகிறார் அருண் விஜய்.

தனது மகன் அர்னவ்வை உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் படிக்க வைப்பதற்காக தனது வீட்டை அடகு வைத்து கடன் பெற்று அந்தப் பணத்தில் அர்னவ்வை ஒரு மிகப் பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார் அருண் விஜய். தற்போது அந்தக் கடனுக்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அர்னவ் 2-ம் வகுப்பு மாணவனாக இருந்தாலும் படு சுட்டியாக இருக்கிறான். அப்பாவும், அம்மாவும் அவன் மீது அளவு கடந்த பாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அதே ஊட்டியில் வசிக்கிறார் பெரும் பணக்காரரான வினய். இவருடைய முழு நேரத் தொழிலே நாய்களை வளர்ப்பதுதான். விலையுயர்ந்த நாய்களை வாங்கி வளர்த்து அவற்றுக்குப் பயிற்சிகள் கொடுத்து நாய்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.  

வினய் இதுவரையிலும் ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறார். தற்போது ஏழாவதாக முறையாகவும் வெற்றி பெற்றால் அது கின்னஸ் சாதனையாகும் என்பதால் அடுத்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரிடத்தில் இருக்கும்  ‘சைபீரியன் அஸ்கி’ வகை நாய் குட்டிகளில் ஒன்று கண் தெரியாமல் இருப்பதை பார்த்துவிட்டு, அதைக் கொன்று விடும்படி தன் அடியாட்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்தக் குட்டியை கொலை செய்து புதைப்பதற்காக எடுத்துச் செல்லும்போது, அது எப்படியோ தப்பியோடி விடுகிறது.

இந்தக் கண் தெரியாத குட்டி நாய், அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அர்னவ் அந்த நாய்க் குட்டிக்கு சிம்பா’ என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வருகிறான். அர்னவ்வின் இந்த நாய் வளர்ப்பு பள்ளியில் இருப்பவர்களுக்குத் தெரிந்து பின்பு வீட்டுக்குத் தெரிந்தாலும் நாய் வளர்ப்பில் அர்ணவ் தீவிரமாக இருக்க.. வேறு வழியில்லாமல் அருண் விஜய்யும் இதை ஏற்றுக் கொள்கிறார்.

சிம்பா வளர, வளர அதற்குக் கண் தெரியவில்லை என்பதையறியும் அருண் விஜய் சிம்பாவுக்கு கண் ஆபரேஷன்  செய்து கண் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.

அதே நேரம் ஊட்டியில் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை அறிந்து சிம்பாவை அர்னவ் அதில் கலந்து கொள்ள வைக்கிறார். அதில் சிம்பா மூன்றாவதாக வென்று இறுதிப் போட்டிக்கு செல்கிறது.

தனக்குப் போட்டியாக யாருமே இல்லாத சந்தோஷத்தில் இருந்த வினய்க்கு இது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. வீடு தேடி வந்து நாயைக் கேட்கிறார். அருண் விஜய் குடும்பத்தினர் இதைக் கொடு்க்க மறுக்கிறார்கள்.

இதனால் கோபமடையும் வினய், சிம்பாவை இந்தக் கடைசி போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்.

இந்த நெருக்கடிகளை தாண்டி சிம்பா போட்டியில் கலந்து கொண்டதா..? வெற்றி பெற்றதா.. இல்லையா..என்பதுதான் மீதிக் கதை.

அருண் விஜய் தனது அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஒரு தந்தையாக தனது மகனது சந்தோஷத்திற்காக அவர் விட்டுக் கொடுக்கும் இடங்களிலும், கடைசியில் சிம்பு மீது அவருக்கே பாசம் உண்டாகி அதனை ஜெயிக்க வைக்க போராடும்விதத்திலும் தனது நடிப்பு பங்களிப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கரிச்சுக் கொட்டும் அப்பா விஜயகுமார், ஒரு பக்கம் கடன்காரன்.. மறுபக்கம் பள்ளியில் பிரச்சினையைக் கிளப்பி வரும் மகன்.. என்று பலவித பிரச்சினைகளை சந்திக்கும் தகப்பன் ஸ்தானத்தில் அருண் விஜய்யின் நடிப்பு குறையில்லாதது என்றே சொல்லலாம்.

இவருடைய நிஜ மகனான அர்னவ் படத்திலும் அருண் விஜய்க்கு மகனாக நடித்திருக்கிறான். நடிப்பு என்னும் திறமை பரம்பரை, பரம்பரையாக அப்படியே தொடர்ந்து வருவதை அவனது நடிப்பில் உணர முடிகிறது. சின்னப் பையன்களுக்கே உரித்தான அந்த வேகம், படபடப்பு, பிடிவாதம் எல்லாவற்றையும் தனது சின்ன முகத்தில் அழகாகக் காட்டியிருக்கிறான் அர்னவ். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இவருடன் ஈடு கொடுத்து சைபீரியன் அஸ்கி வகை நாயான சிம்பாவும் நன்றாக நடித்துள்ளது.

தாத்தா விஜயகுமார் கண்டிப்பு நிறைந்தவராக.. யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி மகனுக்கு அறிவுரை சொல்லும் பாசக்கார அப்பாவாக நிறைவாக நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் மனைவி மகிமா நம்பியார் ஒரு நடுத்தர குடும்பத் தலைவியாக தான் இருக்கும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.  

ஸ்டைலிஷ் வில்லனாக வினய் ராய் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல பானுசுந்தர், ஏ.வெங்கடேஷூம் இப்படியே அவரவர் கேரக்டர்களுக்கு நியாயமாக நடித்திருக்கிறார்கள்.

மற்றவர்களில் மனோபாலாவும், சுவாமிநாதனும் திரையில் தோன்றியிருக்கிறார்கள். வினய்யின் அடியாட்கள் இருவரும் சிரிப்பை வரவழைக்க பெரிதும் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

ஊட்டியின் அழகையும், இயற்கை எழிலையும் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு படம் பிடித்திருக்கிறார் போலும்.. பாராட்டுக்கள்.

சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன் ஆகியோர் ஆங்கில பாடல் வரிகளில் தமிழ் மெட்டோடு இசையை குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து. பின்னணி இசையையும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.

விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக  தொய்வில்லாத கச்சிதமான படத் தொகுப்பினை செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் மேகநாதன். ஊட்டி வீட்டின் செட் அமைப்பு அழகாக உள்ளது. அதேபோல் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிக்கான அரங்கமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் மைக்கேலுக்கு இதற்காக சிறப்பு பாராட்டு உரித்தாகட்டும்.

அதேபோல் நாய்களுக்கு கடினமாக டிரெயினிங் கொடுத்திருக்கிறார்கள். “100 நாட்கள் டிரெயினிங் கொடுத்த பின்புதான் நாய்களை நடிக்க வைத்தோம்” என்றார் இயக்குநர். மிகவும் கடினமான பணிதான். அந்தப் பணியைச் செய்த டிரெயினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தப் படம் முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான படம். அதோடு கூடவே குடும்ப செண்டிமெண்ட் கலந்து வளர்ப்பு பிராணியான நாயைப் பிரதானப்படுத்தி யதார்த்தமான கதையை கொடுத்துள்ளார் இயக்குநர் சரோவ் சண்முகம்.

வளர்ப்பு பிராணிகளிடத்தில் நாம் அன்பு செலுத்தினால் அதற்கான பிரதிபலனை நமக்கு அவைகள் திருப்பிக் கொடுத்து நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதைத்தான் இந்தப் படத்தின் நீதியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

குழந்தைகளுக்கான படம் என்பதால் சட்டென்று மாறும் திரைக்கதைகள் நிறையவே படத்தில் இருக்கிறது. விஜயகுமார் மருத்துவமனையில் தன் உயிரைக் காப்பாற்றிய நாய்க்காக மனம் மாறும் காட்சியும், சிம்பாவை போட்டியில் கலந்து கொள்ள வைக்க ஆடியன்ஸ் குரல் கொடுக்கும் காட்சியும், இறுதியில் வினய் மனம் மாறும் திடீர் டிவிஸ்ட்டும்,  இந்தப் படத்தின் தன்மைக்காக வைக்கப்பட்ட  திரைக்கதை என்பதால் குறை சொல்ல முடியாதுதான்.

மொத்தத்தில் எளிதில் ஊகிக்கக் கூடிய திரைக்கதையாகவே இருந்தாலும், எந்த இடத்திலும் தொய்வு வராத அளவுக்கு குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் படமாக்கியிருக்கிறார் இயக்குர் சரோவ் சண்முகம்.

இந்த சிம்பா’வை குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்..!

RATING : 3 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம்

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’. இந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல்...

“கீர்த்தி ஷெட்டியிடம் மீரா ஜாஸ்மினின் சாயல் இருக்கு” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும்  அதிரடி திரைப்படம் ‘தி வாரியர்’. Srinivaasaa Silver Screen சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்துரி இந்தப் படத்தைத்...

‘கேசினோ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ‘கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்..! மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media...

கிராமத்துப் பின்னணியில் தயாராகும் ‘மூத்தகுடி’ படம்

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து அந்நிறுவனத்தினர் தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.