‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“1989-ல் ‘நிழல்கள்’ படத்தில் நான் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தமிழில் அதிகமாக எனக்குப் படங்கள் வரவில்லை. அதனால் மலையாளத்தில் நடிக்கத் துவங்கினேன். மலையாளத்தில் நான் நடித்த முதல் படம் ஹிட்டானதால் தொடர்ந்து எனக்கு அங்கே வாய்ப்புகள் கிடைத்தது.
1981, 1982, 1983-ம் ஆண்டுகளில் அதிகமாக கேரளாவில்தான் நான் இருந்தேன். அதிகமான மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் நம்மை நடிக்க யாரும் கூப்பிடவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது.
இந்த நேரத்தில்தான் ஒரு நாள் நான் கோயம்புத்தூரில் எனது வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் என்னை போனில் அழைத்து பாரதிராஜா என்னை உடனே தேனிக்குக் கிளம்பி வரச் சொல்வதாகச் சொன்னார்.
உடனேயே கிளம்பி குரங்கு குல்லா அணிந்து கொண்டு ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து ஒரு வழியாக தேனிக்கு வந்து சேர்ந்தேன். அங்கே ‘மண்வாசனை’ படப்பிடிப்பை நடத்தக் கொண்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.
மறுநாளே ஷூட்டிங். என்னுடைய கதாபாத்திரம் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அழகு தமிழில், கவிதை நடையில் பேச வேண்டிய வசனங்களை எனக்குத் தந்திருந்தார் இயக்குநர்.
அந்தப் படத்தின் டப்பிங்கின்போது நான் நடித்தக் காட்சிகளைப் பார்த்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது மிக ஏமாற்றமாகிவிட்டது. நான் நடித்த பல காட்சிகளை வெட்டிவிட்டதால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காட்சிகளே இருந்தன.
அன்றைக்கு ராத்திரி ரூமுக்கு வந்து குமுறி, குமுறி அழுதேன். நம்ம இயக்குநரே இப்படி செஞ்சுட்டாரேன்னு நினைச்சு அழுதேன்.. ஆனாலும் மறுநாள் சத்யம் தியேட்டரில் இந்தப் படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தபோது அகமகிழ்ந்தேன். ஏன்னா.. படத்தில் நான் வருகிறன்ற காட்சிகளிலெல்லாம் கை தட்டல்கள் பறந்தன. அந்தக் கை தட்டல்களே என் கண்ணீரைத் துடைத்தன.
இந்தப் பட வெளியீட்டுக்குப் பின்புதான் எனக்கு மளமளவென்று படங்கள் வந்து குவிந்தன. நானும் ஒரு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டா மாறினேன். அதுக்குக் காரணம் அந்த ‘மண்வாசனை’ படம்தான்..” என்றார் நிழல்கள் ரவி.