Friday, November 22, 2024

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

“தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணங்களை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்…” என்று புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதேபோல் தற்போது தேர்தல் களம் சூடாகி வரும் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும்’ “வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்களும் கட்ட மாட்டார்கள்…” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

கியூப் நிறுவனமோ தற்போது தாங்கள் வாங்கி வரும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும், இந்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதிவரைக்கும்தான் செல்லுமாம். இந்த அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் தியேட்டர்களை திறப்பது என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து, இன்று அல்லது நாளை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தாலும், பேசுவதற்குத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“திரையீட்டுக் கட்டணம் என்பது கியூப் நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. இதில் நாங்கள் பேசி என்ன ஆகப் போகுது.. எங்களிடம் எதற்காக வர வேண்டும்..?” என்று துவக்கத்திலேயே கதவைச் சாத்திவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

தற்போதைய நிலையில் இந்தத் தீபாவளிக்கு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற திரைப்படம், இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம், ஜீவா, அருள்நிதி நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம், ‘இரண்டாம் குத்து’ என்ற திரைப்படம் ஆகிய 4 படங்கள் மட்டுமே இப்போதைக்கு கியூவில் நிற்கின்றன.

ஆனால், இவற்றைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் தங்களுடைய படத்தை வெளியிட மாட்டார்கள் என்பது உறுதி. இதனால் இந்தப் பிரச்சினையை எப்படி பேசித் தீர்ப்பது என்பது பற்றி தங்களுடைய உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்றால் அந்த நாளைக்கு 15 நாட்களுக்கு முன்பேயே அதன் விளம்பர வேலைகள் துவங்கிவிடும். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். தொடர்ந்து டிவி, ரேடியோ, பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் விளம்பரங்களும் வெளிவந்துவிடும்.

ஆனால், வரும் நவம்பர் 12-ம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இருக்கும் இந்த 4 படங்களுமே இப்போதுவரையிலும் எந்தவொரு ஸ்டெப்பையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தக் கடினமான சூழ்நிலையில் வரும் தீபாவளியன்று புதிய படங்களை ரசிகர்கள் பார்ப்பது.. தியேட்டர்காரர்கள் மற்றும் கியூப் நிறுவனத்தின் கைகளில்தான் உள்ளது.

- Advertisement -

Read more

Local News