Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும்  ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில், மூவிஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார்.

“இந்த ’யசோதா’ போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக் கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி & ஹரிஷ் இருவரும் புதிய ஒரு கான்செப்ட்டோடு வந்திருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை இது எல்லாமே நீங்கள் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும். 

இந்த ’யசோதா’ படத்தில் நான் கர்ப்பிணியாக, ஒரு சாதரணமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆக்‌ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யானிக் மற்றும் வெங்கட் இருவரும் முடிந்த அளவிற்கு சண்டைக் காட்சிகளை இயல்பாக இருக்கும்படி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கேற்றபடி பயிற்சி எடுத்து நன்றாகவே செய்திருக்கிறேன்.

இந்தக் கதைக்காக நிறைய ஹோட்டல்கள், மருத்துவமனைகள் எல்லாமே பார்த்தோம். ஆனால், சில நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக எல்லாமே செட் அமைத்து விட்டோம். படம் பிரம்மாண்டமாக வெளிவர வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.

‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக் கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் –  இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மொழிகள் கடந்து இந்தப் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி தனிப்பட்ட ரசனை இருக்கிறது. மொழிகள் கடந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பலரிடமும் எடுத்து சென்ற என்னுடைய சக நண்பர்களான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர், ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் வருண் ஆகியோருக்கு நன்றி.

இந்தப் படத்திற்கு நான்தான் டப்பிங் பேச வேண்டும் என்று முன்பேயே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும்போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப்பிங் செய்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான்.

இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமாரின் கதாபாத்திரமும் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே எனக்கு பிடித்திருந்தது. இதற்கு மேல் நான் எதுவும் சொன்னால் அது ஸ்பாய்லர் ஆகிவிடும். அதை ஏன் நான் சொல்கிறேன் என படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.

இந்த யசோதா படம் நீங்கள் டிரெயிலர் & டீசரில் பார்த்துள்ள காட்சிகளைத் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.

என் மீது என் ரசிகர்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. என் உடல் நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் ரசிகர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் நன்றி..” என்று சொல்லி முடித்தார் நடிகை சமந்தா.

- Advertisement -

Read more

Local News