அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் தனது இசை பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இவர், இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதனையாளர் என்கிற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இசைத்துறையில் அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், மத்திய அரசு இவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தும் பெருமை சேர்த்துள்ளது. சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற ‘வேலியண்ட்’ சிம்பொனியில் பங்கேற்று, உலகத்தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சியை வழங்கியதும் அவரது சாதனையில் முக்கியப் பாகமாகும்.
இந்நிலையில், இளையராஜா இன்று காலை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவர் அங்கு, சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், மூலவர், உண்ணாமலை அம்மன், நவகிரகம் உள்ளிட்ட பல சன்னதிகளையும் தரிசனம் செய்தார். இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

