Friday, April 12, 2024

மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு வரியில் ‘பக்திப் படம்’ என்று இந்த ’மூக்கத்தி அம்மன்’ படத்தை வரையறுக்க முடியாது. ஏனென்றால் அம்மன் படங்களில் வெறும் ‘அருள்’ மட்டும்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அருளோடு சேர்த்து அரசியலும் பேசப்பட்டிருக்கிறது.

படத்தின் நாயகனான ஆர்.ஜே.பாலாஜி நாகர்கோவில் அருகேயிருக்கும் மணப்பாடு கிராமத்தில் லோக்கல் டிவி சேனலில் வேலை செய்யும் இளைஞன். மூன்று தங்கைகள், அம்மா மற்றும் தாத்தாவோடு கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துகிறார்.

அதேநேரம் அந்தப் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் 11,000 ஏக்கர் நிலத்தை தன் சுயலாபத்திற்காக ஆட்டையப் போட நினைக்கும் ஒரு சாமியாரின் முகத்திரையை கிழிக்கவும் அவர் போராடுகிறார். அதற்கு அவருடைய குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மனும்’ உதவுகிறார்.

முடிவில் சாமி ஜெயித்ததா..? அல்லது சாமியார் ஜெயித்தாரா..? என்பதே இந்த மூக்குத்தி அம்மனின்’ மீதிக் கதை.

‘L.K.G.’ படத்தில் இப்போதுதான் எல்.கே.ஜி ஸ்டுடண்ட் என்ற ரேஞ்சிற்கு பவ்யமாய் நடிக்க வந்த ஆர்.ஜே பாலாஜி, இந்தப் படத்தில் டிகிரி பெற்றவர் போல் சில இடங்களில்  வெளுத்துக் கட்டியிருக்கிறார். (கவனிக்க சில இடங்களில் மட்டும்) 

நடிகர்களின் நடிப்பைப் பட்டியல் போட்டால் நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிடுகிறார் நடிகை ஊர்வசி. அவரின் அனுபவ நடிப்பு மொத்தத்தையும் கொட்டி, கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் கனத்த இதயத்தோடு கண்ணீர் வரவும் வைக்கிறார்.

மெளலி மெஸ்ஸில் சர்வர்கள் பேசும் அளவிற்கு கொஞ்சம்தான் பேசுகிறார். ஆனாலும், அவரது கதாப்பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியை கொடுத்திருப்பது அந்தப் பகவதி பாபா’ சாமியார். மனிதரின் உடலும் கண்களும் கதகளி ஆடுகின்றன. மிகச் சிறந்த நடிப்பு.

மூக்கத்தி அம்மனாக’ வரும் நயன்தாராவை மூக்குத்தி அம்மனாகவே ஏற்கத் துவங்கி விடுகிறோம். அதுதான் அவரின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டிய அளவு. ஊர்வசியின் மூன்று மகள்கள், ஒரே சீனில் அசத்திய மயில்சாமி, வெட்டிங் போட்டோ கிராபராக வரும் ஆர்.ஜே.பாலாஜியின் நண்பர் கேரக்டர் என படத்தில் ஆங்காங்கே புஸ் ஆகாத பட்டாசு கேரக்டர்கள் இருப்பது சிறப்பு.

கிரிஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே தரம். குறிப்பாக நயன்தாராவிற்காக…. இல்லை மூக்குத்தி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பி.ஜி.எம். செம! நாகர்கோவிலின் அழகை அதன் அழகு கொஞ்சமும் கெடாமல் கேமராவிற்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

அரசியல் வசனங்களை வம்படியாக திணிக்காமல் போகிறபோக்கில் தெளித்திருப்பது இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி சரவணன் இருவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

மதத்தின் பெயரால் நடக்கும்… சாமியார்கள் நடத்தும் மோசடிகளை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசியிருப்பது அசத்தல். அதிலும் கடவுள் சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கை சார்ந்த விசயங்களை கடவுளை வைத்தே பேசியிருப்பது மாஸ் மெட்டிரியல்.

நிறைய விசயங்களை குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்டும்போது  குறைகளையும் சொல்லித்தான ஆகணும். போலிச் சாமியார்கள் என்றாலே மங்குனிகள்தான் என்றாலும் அதை ஒரு சினிமாவாக காட்டும்போது கொஞ்சம் லாஜிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தச் சாமியார் கேரக்டர் இடைவேளைக்குப் பிறகு வெறும் காமெடி நடிகர் போல் டீல் செய்யப்பட்டிருப்பதால் அவரால் எதுவும் ஆபத்து நடக்காது என்பது மனதில் நன்றாகப் பதிந்து விடுகிறது. அதனால்  படத்தின் மீது பெரிய தாக்கம் வரவில்லை.

அந்த ஏரியாவை மட்டும் இன்னும் பலப்படுத்தி இருந்தால் இந்த மூக்குத்தி அம்மனின்’ ஆசி நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும். நாம் இப்படி சொல்வதற்கும் படத்தில் பதில் இருக்கிறது.

ஆமாம்.. நாம்தான் எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டோமே..!!!

- Advertisement -

Read more

Local News