Friday, April 12, 2024

படக் குழுவினருக்கு பாதுகாப்பு அளித்த எம்.ஜி.ஆர்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கதாசிரியரும், இயக்குநருமான கலைஞானம், தான் இயக்கிய முதல் படமான ‘எதிர் வீட்டு ஜன்னல்’ படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை சந்தித்த சுவையான தருணத்தை இப்போது சொல்லியிருக்கிறார்.

“1980-ல் நானே முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தை இயக்கினேன். அந்தப் படம்தான் ‘எதிர் வீட்டு ஜன்னல்’. இந்தப் படத்தில் ராதிகா, சுதாகர், மனோரமா, சுருளிராஜன் இன்னும் நிறைய பேர் நடித்தார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் அருகில் இருக்கும் ஏற்காடு மலைக் காட்டில் நடந்தது. இதற்காக மொத்தக் குழுவினரும் ஏற்காடு மலையடிவாரத்தில் இருக்கும் துர்கா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருந்ததால் மீண்டும் தேர்தல் நடைபெறவிருந்தது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக எம்.ஜி.ஆரும் சேலம் வந்திருந்தார். சேலத்தில் இருந்து ஏற்காடுவரையிலும் ஒரு மிகப் பெரிய ஊர்வலம் நடந்து அதன் முடிவில் பொதுக்கூட்டமும் நடந்து முடிந்தது.

அப்போது எம்.ஜி.ஆர். நாங்கள் இருந்த அதே துர்கா ஓட்டலில்தான் தங்கினார். நாங்கள் தங்கியிருந்ததை கேள்விப்பட்டு எங்களையெல்லாம் அவரது அறைக்கு வரச் சொன்னார். நான் போய், “இன்னிக்கு ஷூட்டிங் இருக்கு.. கிளம்புறோம்” என்றேன். “அதெல்லாம் வேணாம். இன்னிக்கு ஒரு நாளைக்கு ஷூட்டிங்கை கேன்ஸல் பண்ணுங்க…” என்றார்.

எம்.ஜி.ஆரின் சொல்லுக்கு அப்பீலே கிடையாதே.. நானும் ஷூட்டிங்கை கேன்ஸல் செஞ்சேன். அப்புறம் எங்க எல்லாரையும் அவர் அறைக்குள்ள கூப்பிட்டார். நான் ராதிகா, சுதாகர், மனோரமா எல்லாரும் சென்றோம். எங்கள் எல்லாரிடமும் “எப்படியிருக்கீங்க..?” என்று சாதாரணமாக விசாரித்துப் பேசினார்.

அப்போது அந்தப் படத்தில்தான் நடிகர் நாகராஜ சோழனை அறிமுகப்படுத்தியிருந்தேன். சோழனும் உள்ளே வந்துவிட்டான். அவனிடமும் விசாரித்தார். அவன் அப்போது கட்டுமஸ்தாக இருந்தான். “பாடி பில்டர்..” என்றான். உடனேயே அவனது சட்டையைக் கழட்டச் சொல்லிப் பார்த்தார்.

அவனது உடம்பைப் பார்த்துவிட்டு, “இப்படியா இருக்குறது.. டெய்லி எக்சர்சைஸ் செய்யணும். இல்லைன்னா உடம்பு வளையாது.. தோற்றம் இருக்காது..” என்று சொல்லிவிட்டு என்ன எக்சர்சைஸ் செய்யணும்ன்னு அவரே கட்டிலிலிருந்து இறங்கி செஞ்சு காட்டினார்.

ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சரா இருந்தவரு.. இப்படியொரு புதுமுக நடிகனுக்கு உடம்பை எப்படி வைச்சுக்கணும்ன்னு சொல்லி கிளாஸ் எடுக்குறாரேன்னு நாங்கெள்லாம் ரொம்பவே ஆச்சரியப்பட்டோம்.

அதே மாதிரி இன்னொரு விஷயத்தையும் செஞ்சாரு எம்.ஜி.ஆர். அவரைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் கூட்டமும், கட்சிக்காரங்க கூட்டமும் கட்டுக்கடங்காமல் அந்த ஹோட்டல் வாசலில் நின்றிருந்தது.

வெளில போய் கட்சிக்காரங்களைக் கூப்பிட்டு, “ஒருத்தர்கூட உள்ள வரக் கூடாது. இங்க சினிமா படப்பிடிப்புக் குழு இருக்காங்க…” என்று சொல்லி எங்களைப் பாதுகாத்தார்.. இதையெல்லாம் எந்தக் காலத்துலேயும் நான் மறக்க மாட்டேன்…” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் கலைஞானம்.

- Advertisement -

Read more

Local News