Friday, April 12, 2024

சினிமா வரலாறு-39 சின்னப்பா தேவருக்கு எம்.ஜி.ஆர். வாங்கித் தந்த பட வாய்ப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ராஜகுமாரி’ படத்தில் பணியாற்றும்போதுதான் எம்.ஜி.ஆர்.  அவர்களுக்கும், கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் நெருக்கமான நட்பு உருவானது.

அதே போன்று தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களுக்கும்  எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு, சகோதர பாசமாக மாறுவதற்குக் காரணமாக இருந்ததும் ‘ராஜகுமாரி’ படம்தான்.

எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்ற தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களை  ‘சாலிவாகனன்’ படத்திலே நடித்தபோதுதான் முதன் முதலாகப்  பார்த்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவர்களிடையே துளிர்விட்ட நட்பு தங்களது  வேதனைகளை ஒருவருக்கொருவர்  பகிர்ந்து கொள்கின்ற அளவிற்கு மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் நெருக்கமாக வளர்ந்தது.

“நட்பு முதிர்ந்து ஒரு கால கட்டத்தில் இருவரும் சகோதரர்களாகவே ஆகிவிட்டோம். எங்களது ஏற்றத்தாழ்வோ, அரசியல் கொள்கைகளோ, ஜாதி, மதம் சம்பந்தமான நம்பிக்கைகளோ, தொழிலோ எதுவும் எங்களைப் பிரிக்கவில்லை…” என்று சின்னப்பா தேவருக்கும் தனக்கும் இருந்த நட்பு பற்றி  ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

‘சதி லீலாவதி’ படத்திலே எம் ஜி ஆருக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என்று எம்.கே.ராதா அவர்கள் போராடியதைப்போல ‘ராஜகுமாரி’ படத்திலே தனது நண்பரான சின்னப்பா தேவருக்கு ஒரு  வாய்ப்பினைப் பெற்றுத் தரப் போராடினார் எம்.ஜி.ஆர்.

‘ராஜகுமாரி’ கதையின்படி  ராணிக்கு ஒரு மெய்க்காப்பாளன் இருந்தான். அந்த மெய்க்காப்பாளனிடம் சண்டையிட்டு கதாநாயகன் அவரை  வெல்கின்ற  காட்சியிலே  எம்.ஜி.ஆரோடு  நடிக்க  மிகப் பெரிய பயில்வான் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளரான சோமு.

“அந்த பயில்வான் வேஷத்துக்கு உங்க கம்பெனியிலேயே ஒரு நடிகர் இருக்கும்போது எதற்கு வெளியில் இருந்து ஆளை வரவழைக்க வேண்டும்…?” என்று கேட்ட எம்.ஜி.ஆர். தனது நண்பரான சின்னப்பா தேவரை அந்தப் பாத்திரத்திற்கு சிபாரிசு செய்தார்.

“நம்ம கம்பெனியில் மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்டிரா நடிகன் அவன்…” என்று தயாரிப்பாளர் சோமு சற்று அலட்சியமாகச்  சொன்னபோது “சின்னப்பா அவர்களின் திறமையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவரது திறமையைப் பூரணமாக அறிந்தவன் நான். அவர் ரொம்ப நன்றாக சண்டை போடுவார்…” என்று தேவருக்காக பரிந்து பேசினார் எம்.ஜி.ஆர்.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????

“நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இது. அப்படி இருக்கும்போது மிகப் பெரிய பயில்வான் ஒருவரை நீங்கள் தோற்கடித்தால்தானே நன்றாக இருக்கும். அதனால்தான் கமாலுதீன் என்கிற மிகப் பெரிய பயில்வான் ஒருவரை அந்த வேடத்திற்கு போடச் சொல்லியிருக்கிறேன்…” என்று படத் தயாரிப்பாளர் சோமு சொன்னபோது “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சின்னப்பா  இல்லை என்றால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம்” என்றெல்லாம்  சொல்லி  வாதாடி அந்த வேடத்தை தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

“சாயா” என்ற படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அவரை மாற்றிவிட்டு அப்போது மிகவும் பிரபலமான நடிகராக இருந்த பி.யு.சின்னப்பா அவர்களைப் போட்டு அந்தப் படத்தை எடுக்க அந்தப் படத் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர்.

அந்தப் படத்தில் ஏற்பட்ட அந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக ‘ராஜகுமாரி’ படத்திலே கடைசிவரை தன்னைக்  கதாநாயகனாக நடிக்க விடுவார்களா என்ற அச்சம் எம்.ஜி.ஆருக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவருடைய அந்த அச்சத்தை அதிகப்படுத்துவதுபோல பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்தன. தடாலென்று பாகவதர் போல நீண்ட முடியுடன் ஒருவர் ஸ்டுடியோவில் தென்படுவார். உடனே “உங்களுக்குப் பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து டெஸ்ட் எடுக்கப் போகிறார்களாம்” என்று எம்.ஜி.ஆருக்கு செய்தி வரும். அந்தச் செய்தியைக் கேட்ட அன்று இரவு முழுவதும் எம்.ஜி.ஆருக்கு தூக்கம் இருக்காது.

இப்படிப்  பல கண்டங்களைத் தாண்டி ‘ராஜகுமாரி’ படம் பாதிக்கு மேல் வளர்ந்த நிலை யில் மிகப் பெரிய சோதனை ஒன்றை எம்.ஜி.ஆர் எதிர்கொள்ள வேண்டி வந்தது.

‘ராஜகுமாரி’ படத்தின்  தயாரிப்பாளர்களான சோமு அவர்களுக்கும் மொகிதீன் அவர்களுக்கும் படத்தை எடுத்த வரையில் திரையிட்டுக் காட்டினார் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

சாமி அவர்களைப் பொறுத்தவரையில்  படம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாக அவர் எண்ணினார். ஆகவே படத்தைப் பார்த்துவிட்டு முதலாளிகள் இருவரும் தன்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார் அவர்.  

ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக படத்தின் முதலாளிகள் இருவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இருவருக்குமே படம் பிடிக்கவில்லை.

“முந்தைய இரு படங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்னொரு தோல்விப் படம் கொடுக்க வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்” என்று தன்னுடைய பங்குதாரரான சோமுவிடம் கூறினார் மொகிதீன். அவர் அப்படிக் கூறியவுடன் சோமு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.

இன்னொரு தோல்விப் படத்தை தங்களது நிறுவனம் தாங்காது என்று அவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அதே சமயம் ‘ராஜகுமாரி’ படம் நிறுத்தப்பட்டால் முதன் முதலாக அந்தப் படத்திலே இயக்குநராக அறிமுகமாகும்  ஏ.எஸ்.ஏ.சாமி, அந்தப் படத்தில் கதானாயகனாக நடித்து வரும் ராமச்சந்திரன் ஆகிய இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமே என்று யோசனை செய்த அவர், அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். 

“எப்படியும் பாதி படத்துக்கும் மேலாக எடுத்துவிட்டோம். மீதமுள்ள நான்காயிரம் அடி படத்தையும் எடுத்துவிட்டுப் போட்டுப் பார்ப்போம். அதற்குப் பிறகும் படம் பிடிக்கவில்லை என்றால் யார் கண்ணிலும் காட்டாமல் படத்தை தூக்கிப் போட்டு விடலாம்’ என்பதுதான்  மொகிதீனிடம் அவர்  சொன்ன முடிவு.

எம்.ஜி.ஆர்., ஏ.எஸ்.ஏ.சாமி ஆகிய இருவரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மொகதீன் அவர்களும் சோமுவின் முடிவை ஏற்றுக் கொள்ள ‘ராஜகுமாரி’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது.

இப்படி அடிக்கடி ஏற்பட்ட குழப்பங்களால் ‘ராஜகுமாரி’ படம் முடிய பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. அந்தப்  படத்திலே எம்.ஜி.ஆருக்கு பேசப்பட்டிருந்த மொத்த சம்பளம் 2500 ரூபாய். அந்தப் பணத்தை மாதம் 200 ரூபாயாக பிரித்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு பன்னிரண்டு மாதங்களையும் தாண்டி  நடைபெற்றதால் மொத்த சம்பளப் பணத்தையும் வாங்கித் தீர்த்து விட்டிருந்த  எம்.ஜி.ஆர். கையில் காசில்லாமல் கோயம்பத்தூரில் வசிக்க மிகவும்  சிரமப்பட்டார்.

ஒரு கட்டத்தில் சென்னைக்கு கிளம்பிவிடலாம் என்று முடிவெடுத்தபோது ஜுபிடர் பிக்சர்சில் நடன ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கே.ஆர்.குமார் என்பவர் எம்.ஜி.ஆரை அழைத்து “நீங்கள் எனக்கு ஒரு உறுதி மொழி தர வேண்டும்” என்றார்.

அந்த நடன இயக்குனர் குமார் அவர்களை தனது ஆசானாக எண்ணி மதிப்பவர்  என்பதால் அவர் சொன்னதைக் கேட்டு பதில் பேசாமல் நின்றார்  எம்.ஜி.ஆர் .

”செலவுக்கு பணம் இல்லை என்பதால் நீங்கள் சென்னைக்கு போக முடிவெடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மொத்தத்  தமிழ் சினிமா உலகமும் கதாநாயகன் வேடத்திற்கு நீங்கள் லாயக்கில்லை என்று நினைக்கிறது. அப்படிப்பட்ட நேரத்திலே உங்களுக்குக்  கதாநாயகன் வேடம் கொடுத்து ஜுபிடர் பிக்சர்சார் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு உங்களுக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தவர்கள்  படத்தை முடிக்காதது மட்டுமில்லாமல் இதே சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேறொரு நடிகரை வைத்து அந்தப் படத்தை எடுக்கவும் முயற்சி செய்தார்கள். ஆனால் சோமு அண்ணன் அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. ஏறக்குறைய படம் முடிவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது. அதனால், இந்தப் படத்தை முடிக்காமல் நீங்கள் இங்கிருந்து கிளம்பக் கூடாது” என்று  அறிவுரை கூறியது மட்டுமின்றி ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டிய குமார், “இதில் ஆயிரத்து எண்ணூறு  ரூபாய் இருக்கிறது. இதை வைத்துக் கொள்ளுங்கள். நான் அடுத்த முறை வரும்போது வாங்கிக் கொள்கிறேன்…” என்றார்.

‘இந்தப் பணத்தை எடுத்து நான் செலவு செய்துவிட்டால் உங்களுக்கு எப்படி நான் பணத்தைத் திருப்பித் தருவது” என்று ராமச்சந்திரன் கேட்டபோது வாய் விட்டு சிரித்த அவர் “நீங்கள் எப்போதும் இப்படியேதான் இருக்கப் போகிறீர்களா என்ன? உங்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயமாக அமையும். அப்போது நான் உங்களிடம் பணத்தை வாங்கிக் கொள்கிறேன்..” என்றார்.

“அன்று அவர் செய்த அந்த உதவியினால்தான் கோவையில் தங்கி என்னால் அந்தப் படத்தில் நடித்து முடிக்க முடிந்தது…” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இத்தனை போராட்டங்களை சந்தித்துவிட்டு திரைக்கு வந்த ‘ராஜகுமாரி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது.

அந்தப் படம்தான்  தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களின் பட்டியலில்  ஒரு நிரந்தரமான  இடத்தை  எம்ஜிஆருக்கு பெற்றுத் தந்தது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News