‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் இருக்கும் திரையரங்குகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று பலரும் நினைத்திருந்தனர்.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏகத்துக்கும் பல பஞ்சாயத்துக்கள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் ‘மாஸ்டர்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களை சட்டென்று திரைக்குக் கொண்டு வருவது நிச்சயமாக முடியாத விஷயம் என்பதால், வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வரவே வராது என்று உறுதியாகச் சொல்லலாம்.
அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதியன்று பொங்கல் தினத்தன்றாவது ‘மாஸ்டர்’ வெளியாகுமா என்பதும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
இதற்கிடையில் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் இன்றைக்கு அளித்துள்ள பேட்டியில், “வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகாது. 2021 பொங்கலுக்கு வெளியாகுமா என்பது அப்போதைய காலச் சூழலைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்…” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ‘தியேட்டர்களின் திரையீட்டுக் கட்டண விவகாரத்தில் ஒரு சமூக முடிவு காணாதவரைக்கும் பெரிய பட்ஜெட் படங்களை திரையிட மாட்டோம்’ என்று ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ அறிவித்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தச் சங்கத்தில் முக்கியமான நபராக இருப்பதால் சங்கத்தின் முடிவுக்கு அவர் நிச்சயமாகக் கட்டுப்படுவார். இதனாலேயே ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றகிறது.
தயாரிப்பாளர் இந்த நிலையில் இருந்தாலும், படத்தின் நாயகனான ‘இளைய தளபதி’ விஜய்யின் எண்ணவோட்டம் வேறாக இருக்கிறதாம்.
பொதுவாக விஜய் படத்தின் வசூலை விஜய்யின் ரசிகர்களைவிடவும் அஜீத்தின் ரசிகர்கள்தான் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். காரணம், ‘அஜீத்தின் எந்தப் படத்தின் வசூலை விஜய்யின் இந்தப் படம் தாண்டியிருக்கிறது…?’ என்றுதான் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
விஜய் படமோ, அஜீத் படமோ வெளியான சில நாட்களில் டிவீட்டரிலும், முகநூலிலும் இரு தரப்பு ரசிகர்களிடையே சூடான விவாதங்கள் நடைபெறும். இரு தரப்புமே தங்களுக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விவரக் கணக்குகளைச் சொல்வார்கள்.
“தங்களது ஹீரோ நடித்த படம்தான் மிக அதிகமான ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டது. மிக அதிகமான தியேட்டர்களில் வெளியானது.. முதல் நாள் வசூலில் முந்தைய படத்தை தாண்டிவிட்டது. மொத்த வசூலிலும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது..” – இப்படி இரு தரப்பினருமே சுதந்திரப் போராட்டம் போல படத்தின் வசூல் கணக்கை வைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்புவார்கள்.
வசூல் ரீதியாக இது நாள்வரையிலும் பல்வேறு ரிக்கார்டுகளை தன் வசம் வைத்திருக்கும் விஜய், இப்போதைய சூழலில் ‘மாஸ்டர்’ படம் வெளியானால் இதுவரை தான் நடித்த படங்களிலேயே மிகக் குறைவான வசூலையும், மிகக் குறைவான தியேட்டர்கள், மிகக் குறைந்த ஸ்கிரீன்கள், மிகக் குறைவான முதல் நாள் வசூல் என்று மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று யோசிக்கிறார்.
ஏனெனில், இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும்தான் இன்றைய தேதிவரையிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் பல நாடுகளில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்காவில் பல மாநிலங்களில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில் ‘மாஸ்டர்’ படத்தை இப்போது வெளியிட்டால் திரையிடப்படும் ஸ்கிரீன்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்.
‘மாஸ்டர்’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம் என்பதால் மிக அதிக வசூலையும் அந்தப் படம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசுகளின் விதிமுறையினால் இதுவரையிலும் வந்து கொண்டிருந்த தியேட்டர் வசூலில் இந்தப் படத்திற்கு பாதிதான் கிடைக்கும் என்ற கசப்பான உண்மையும், விஜய்யை யோசிக்க வைத்திருக்கிறது.
இதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து உலகம் தழுவிய அளவுக்கு கொரோனாவை விரட்டிவிட்டு… அனைத்துத் தியேட்டர்களும் திறந்த பின்பு ‘மாஸ்டர்’ படத்தை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம்.
இதனாலேயே ‘மாஸ்டர்’ பற்றி எந்த முன்னேற்பாட்டையும் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தரப்பு திணறி வருகிறது.