Friday, October 22, 2021
Home HOT NEWS "நெடுமுடி வேணு எனக்கு அறிவு வாசலைத் திறந்தவர்" - மம்மூட்டியின் உருக்கமான அஞ்சலி பதிவு

“நெடுமுடி வேணு எனக்கு அறிவு வாசலைத் திறந்தவர்” – மம்மூட்டியின் உருக்கமான அஞ்சலி பதிவு

சமீபத்தில் மறைந்த மலையாள திரையுலகதத்தின் மூத்த நடிகரான நெடுமுடி வேணு பற்றி ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பதிவொன்றை எழுதியிருக்கிறார்.

அதில் “இத்தனையாண்டுகளாக வேணு தனக்கு எல்லாமுமாக இருந்து வந்திருக்கிறார்” என்று புகழ்ந்திருக்கிறார் மம்மூட்டி.

மம்மூட்டி எழுதியதன் தமிழாக்கம் இங்கே :

1981-ல் ’கோமரம்’ என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்தான் நாங்கள் அறிமுகமானோம். எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது. சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் முதலில் தங்கினோம். பின்னர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் காட்டேஜ் வாசம்.. 1985 வரையிலும் இது தொடர்ந்தது.

வேணுவின் நட்பில் எனக்கு நினைவு கூற நிறைய விஷயங்கள் உண்டு. என்னிடம் புதிய காட்சிகளுக்கு, புதிய உலகத்திற்கு புதிய புரிதலுக்கான வாசலை திறந்தது வேணுதான். நாடகம், சங்கீதம், நாட்டுப்புற கலைகள், கதகளி, கூடியாட்டம் என புதிது புதிதாக வாசல்களை திறந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். வேணுவுடனான அந்தக் காலத்தில் துக்கத்தை நான் அறிந்ததே இல்லை. எப்போதும் புதிதாக சொல்ல வேணுவிடம் விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அப்படியான விஷயங்கள் எதுவும் வேணுவிடம் பகிர இருந்ததில்லை.

1982-ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது அவருக்கும், துணை நடிகர் விருது எனக்கும் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக திருவனந்தபுரம் போய் விருது வாங்கி, எர்ணாகுளம் வந்து உணவை முடித்துவிட்டு, திருச்சூர் ஷூட்டிங் சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது.

சென்னையில் நாங்கள் ஒன்றாக வசித்த காலங்கள்தான் என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான காலங்கள் என எனக்குத் தோன்றும். அப்போது நிறைய ஷூட்டிங்குகள் மெட்ராஸில் தொடர்ச்சியாக இருந்தன. 1983-84 காலத்தில் மாதக் கணக்கில் நாங்கள் ஒரே அறையில் தொடர்ந்து வசித்ததுண்டு.

அக்காலத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைதான் ஷூட்டிங் விடுமுறை உண்டு. ஊருக்குப் போக முடியாது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை தின வாடகைக்கு அழைத்து காலையில் கிளம்புவோம். சின்ன ஷாப்பிங், மலையாளி ஹோட்டலில் மூக்குமுட்ட உணவு, மேட்னி, செகண்ட் ஷோ சினிமா முடித்து அறைக்கு வருவோம்.

ஒரே நேரத்தில் இரண்டு, மூணு சினிமாக்களில் நடித்த காலம் அது. மதிய இடைவேளையில், கிடைக்கும் இடத்தில் நியூஸ் பேப்பரில் படுத்து உறங்குவோம். வெயில் வரும் நேரம், வேணு என்னை எடுத்து தலையணையில் படுக்க வைத்த பல நேரங்கள் உண்டு.

ஒரு நாள் மதிய நேரம் கிடைத்த பாறையின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். விழிக்கும்போது காரின் பின் சீட்டில் இருந்தேன். என்னை தூக்கி காரில் படுக்க வைக்கும் அளவுக்கு வேணு பலசாலியாக இருந்தார். நான் அன்று இத்தனை கனமாக இல்லை. இப்படியாக வேணு என் நண்பரானார்..

சினிமாவில் அவர் எனக்கு அண்ணன், அப்பா, மாமா என பல கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு, சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்ததாக எனக்குத் தோன்றியதுண்டு.. அந்த கதாபாத்திரங்களுக்கு அப்புறமும் அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.

கடந்த என் பிறந்த நாளிலும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார். வாண வேடிக்கை போன்ற பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்துகளால் நிரம்பிய தினமாக அது இருந்தது. அதற்கு இடையிலும், அந்த சிறு தீபத்தின் ஒளியை நான் கையில் வாங்கினேன். என்றும் அந்த வெளிச்சம், என் வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. இருக்கும்.

கடந்த என் பிறந்த நாளைக்கும் சுசீலா அம்மாவின்(வேணுவின் மனைவி) புதிய வேட்டியும், கடிதமும் எனக்கு வந்திருந்தது.

நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஷ்ம பர்வம்’, ‘புழு’ ஆகிய இரு படங்களிலும் வேணு என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார்.

வேணு என்னை தம்பியைப் போல் கருதிய என் சகோதரன், என் வழிகாட்டி, என் நண்பன், எனக்கு அறிவுரை சொன்ன என் தாய் மாமன். நிறைய நேசித்த என் தகப்பன். அதற்கு அப்புறமும் நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத எல்லாமுமாயிருந்தார்.

என்னால் அவருக்கு விடை தர முடியாது. என்றும் என் மனதில் அவர் இருப்பார். ஓவ்வொரு மலையாளியின் மனதிலும் மங்காத நட்சத்திரமாக ஜொலித்து நிற்பார். நான் கண்களை மூடி, கைகளை கூப்பி நிற்கிறேன்…” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார் மம்மூட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ‘ஜெய்’

ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. பிரம்மாண்டமான செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய்...

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்!

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,...

கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி தொழில் பற்றிய ‘பம்பர்’ திரைப்படம்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வேதா பிக்சர்ஸ்...

ஜெய் பீம் படத்தின் டிரெயிலர்

Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written...