கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய படம் ’காதல் தி கேர் ‘ மம்மூட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்துக்கு மாத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார். மம்மூட்டி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘நான் மேத்யூ தேவஸ்ஸி வார்டு-3 இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்’ என்ற மம்மூட்டியின் பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகளும், சிக்கல்களும் எழுகிறது. இதற்கிடையில் வழக்கு ஒன்றில் அவர் சிக்கியிருப்பதாகவும் காட்சிகள் வந்து போகிறது. யாரிடமும் அதிகம் பேசாத சுபாவம் கொண்டவர் என தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார் மம்மூட்டி. அவர் சொல்வதைப்போலவே ட்ரெய்லரில் பின்னணி குரல் தாண்டி அவர் பேசும் காட்சிகள் குறைவுதான்.
சில காட்சிகளில் வந்து மட்டுமே வசனமின்றி வந்து செல்கிறார் ஜோதிகா. முக பாவனைகளால் மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். தங்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன என பின்னணியில் மம்மூட்டியின் குரல் ஒலிக்கிறது. ஆனால் ‘காதல் தி கோர்’ என்ற டைட்டிலுக்கு ஏற்றார்போல இருவருக்குள்ளும் காதலோ, சந்தோஷமான தருணங்களோ இருப்பதாக ட்ரெய்லரில் காட்சிகள் இல்லை.
ட்ரெய்லரில் ஒருவித அமைதியும், பிரச்சினைகளும் மட்டுமே வந்து செல்கின்றன. மொத்தத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவரின் முடிவு அவரது குடும்பத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும், மம்மூட்டி – ஜோதிகா இடையிலான காதலை டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சர்ப்ரைஸாக படத்தில் ஜியோ பேபி வைத்திருக்கலாமோ என யோசிக்க முடிகிறது.