Friday, April 12, 2024

சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்க கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘சிவகங்கை சீமை திரைப்படம் அப்போது சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு’ எதிராக எடுக்கப்பட்ட படம் என்ற விமர்சனத்தோடு வெளியாகி தோல்வியைத் தழுவிய படம்.  

அந்த படத்திலே ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட கண்ணதாசன் தீவிரமாக முயற்சி செய்தபோது இயக்குநர் ஏ.பீம்சிங் அவருக்கு உதவ முன் வந்தார். கண்ணதாசனின் பட நிறுவனத்துக்காக சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க தான் ஒரு படத்தை இயக்கித் தருவதாக சொன்னார்.          

அப்போது சிவாஜிகணேசன்- ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்களுக்கென்று  ஒரு தனி மார்க்கெட் உருவாகி இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்த  எல்லா  படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்ததால், அவர்கள் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்தது.                                     

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பீம்சிங்கும், சிவாஜியும் வலிய வந்து உதவி செய்கிறேனென்று சொன்னபோதிலும் அதை கண்ணதாசன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அதற்குக் காரணம் ‘விதி’ என்றுதான் சொல்ல வேண்டும்.

சிவாஜியை  விட்டுவிட்டு  சந்திரபாபுவைக்  கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் அவர் கதாநாயகனாக  நடிக்க ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்தார். அதற்குப் பிறகு ஒரு நாள்கூட கவலை இல்லாமல் அவரால்  இருக்க முடியவில்லை.

சந்திரபாபுவை வைத்துப்  படமெடுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு வேலையல்ல. அவர் சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வர மாட்டார். அப்படியே வந்தாலும் எப்போது செட்டில் இருப்பார், எப்போது காணாமல் போவார் என்று தெரியாது. அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். பேசிய பணத்தைவிட அதிகமாகப் பணம் கேட்பார்.

அது தவிர, அவரை வைத்துப் படமெடுத்தால் குறிப்பட்ட நேரத்தில் படத்தை வெளியிட முடியாது என்றெல்லாம் அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் எல்லோருமே அப்போது அவரைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர்.

சந்திரபாபு தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால்  தன்னிடம் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினார் கண்ணதாசன்.

இப்படிப்பட்ட  நிகழ்ச்சிகள் சந்திரபாபுவோடு முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும்  தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் நடிகர்கள் திரையுலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அதைப்  போன்று நம்முடைய  படத்துக்கு நிச்சயமாக அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்கிறவர்களும் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கே.சங்கர் இயக்க சந்திரபாபுவிற்கு ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்த அந்த படத்தில் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம். ராஜ சுலோசனா என்று பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தனர். 

சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிரகதி ஸ்டுடியோவிற்கு விண்ணப்பித்து பின்னர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணதாசன் முதன் முதலில் நடித்த படமாக சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான ‘ பராசக்தி’ படம் அமைந்தது.

அந்தப் படத்திலே நீதி மன்றக் காட்சியில் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை சிவாஜி பேசியபோது நீதிபதியின் வேடத்திலே அந்தப் படத்திலே அமர்ந்திருந்தவர் கண்ணதாசன்தான்.

அவர் நடித்த இரண்டாவது படமாக ‘கவலை இல்லாத மனிதன்’ படம் அமைந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே கல்லூரிப் பட்டமளிப்பு விழாவிலே அவர் பேசிய காட்சி இடம் பெற்றது.

‘கவலை இல்லாத மனிதன்’ படத்தின் படப்படிப்பு நடைபெற்றபோது அந்தப் படத்திலே நடித்த எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா உட்பட எல்லா நட்சத்திரங்களும்  காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்புக்கு எட்டு மணிக்கே மேக்கப்பைப்  போட்டுக் கொண்டு தயாராகி விடுவார்கள்.

ஆனால் சந்திரபாபுவைப் பொறுத்தவரை தினமும் காலை 10 மணிக்குதான் அவர் எழுந்திருப்பார். அதைத் தொடர்ந்து அவர் குளித்து தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு வர எப்படியும் குறைந்தது 11 மணியாகிவிடும். அதற்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு 12  மணி அளவில் சூட்டிங்கிற்கு வருவார் அவர்.

ஏதோ ஒரு நாள் அவர் அப்படி 12 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தார் என்றால்  மற்ற நட்சத்திரங்கள்  பொறுத்துக் கொண்டிருப்பார்கள். தினமும் அப்படி வருவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டதால் தயாரிப்பு நிர்வாகி வீரய்யாவை அழைத்த அவர்கள் “கவிஞரை  சந்திரபாபுவிடம் பேசச்  சொல்லுங்கள். நாங்களும் நடிகர்கள்தானே. அவருக்காக தினமும் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எப்படி..?” என்று அவரிடம்  கேட்டனர். இந்தத் தகவல் சந்திரபாபுவிற்கும் போனது.

அவர்கள் எல்லோரும் அப்படி தங்களது குறையை வெளிப்படையாகத்  தெரிவித்த பிறகாவது சந்திரபாபு நேரத்துக்கு படப்படிப்பிற்கு வரத் தொடங்கினாரா  என்றால் இல்லை. வழக்கம்போல 12 மணிக்குத்தான்  மேக்கப்புடன் செட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்படி 12 மணிக்கு அவர் படப்படிப்பிற்கு  வந்தவுடன்  “பாலையா அண்ணனையும், ராதா அண்ணனையும்”  வரச் சொல்லுங்கள் என்றார் இயக்குநர் கே.சங்கர்.

அவர்களை அழைத்து வர மேக்கப் அறைக்குச்  சென்ற உதவி இயக்குநர் அவர்கள் அங்கே இல்லை என்ற விவரத்தை சொன்னவுடன்  தயாரிப்பு நிர்வாகியான  வீரய்யா அந்த ஸ்டுடியோ முழுவதும் அவர்களைத் தேடிப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் எங்கேயும் இல்லை.

சந்திரபாபுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அவர் செட்டுக்குள் நுழைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்களது காரில் ஏறி வீட்டுக்கு போய்விட்டனர்.

இந்த அதிர்ச்சி வைத்தியத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் சரியான நேரத்திற்கு  படப்பிடிப்பிற்கு வந்தார் சந்திரபாபு.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைகின்ற கட்டத்துக்கு வந்தபோது மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு திரும்பினார்  சந்திரபாபு.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது காலை ஏழு மணி முதலே  படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார் இயக்குநர் சங்கர். 

ஒன்பது மணி படப்பிடிப்பிற்கே ஒழுங்காக வராத சந்திரபாபுவிடம் காலை ஏழு மணிக்கே படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது அதற்கு லேசான மறுப்பைக்கூட சந்திபாபு  தெரிவிக்கவில்லை.

ஆனால், அதற்குப் பதிலாக “ஏழு மணிக்கு வர வேண்டும் என்றால், முதலில் பேசிய சம்பளத்திற்கும் மேலாக இருபதாயிரம் ரூபாய் வேண்டும்..” என்றார்.

எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்ற மன நிலைக்கு அப்போது வந்துவிட்டிருந்த  கண்ணதாசன் எந்தவிதமான மறுப்பையும் சொல்லாமல் உடனடியாக இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

அப்படிப் பணம் கொடுத்த பிறகும் படப்பிடிப்பு தினத்தன்று அவர் சீக்கிரம் வராமல் இருந்து விட்டார் என்றால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் ஒரு நாள் காலையில் எழுந்ததும்  நேராக சந்திரபாபு வீட்டுக்கு போனார் கண்ணதாசன்.

உள்ளே அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பையன் சொன்னான். ஸ்டுடியோவிலோ எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, ராஜ சுலோசனா ஆகியோர் காலை ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக்  கொண்டு படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார்கள்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் உடகார்ந்து கொண்டிருந்த கண்ணதாசன் பொறுமை இழந்து அங்கிருந்த பையனை அழைத்தார்.

“இப்போதாவது எழுந்து விட்டாரா என்று உள்ளே போய் பாரப்பா…?” என்றார்.

“அவர் எழுந்து பின்பக்கமாக அப்போதே போய்விட்டாரே” என்று அந்தப் பையன் சொன்ன பதில் அவரை நிலை குலைய வைத்தது.

அந்தப் பையன் சொன்னதைக் கேட்டதும் கண்ணதாசன் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது.

அடுத்து கவிஞர் என்ன செய்தார் எனபதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News