Friday, January 22, 2021
Home சினிமா வரலாறு சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன்

சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன்

சந்திரபாபுவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன்  பின் வாசல் வழியாக சந்திரபாபு  போய் விட்டார் என்று தெரிந்ததும்  தான் வாசலில் உட்கார்ந்திருப்பதால் தன்னைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு பின் வாசல் வழியாக ஸ்டுடியோ போய் விட்டார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.

பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள  ஸ்டுடியோவிற்கு அவர்  தொடர்பு கொண்டபோது  சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன், சிறிது நேரம் கவிஞருக்கு  பேச்சே வரவில்லை.

சந்திரபாபு படப்பிடிப்பிற்கு வராததைவிட அவர் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பின் வாசல் வழியாக வெளியேறியது அவர் மனதை மிகவும் பாதித்தது.

தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக அந்த சம்பவத்தைக் கருதினார் கண்ணதாசன். படம் என்ன ஆகுமோ என்ற பயமும் கடன்காரர்களுக்கு என்ன பதிலைச்  சொல்வது   என்ற கவலையும் அவரை சூழ்ந்து கொண்டது.

அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் தனது துயரத்தை எல்லாம் நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதார். சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் காத்திருந்ததைப் பற்றியும்  அவரிடம்  ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சந்திரபாபு பின் வாசல் வழியாக சென்றதைப்  பற்றியும் ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.

எந்த வீட்டிலும் போய்  நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்தது கிடையாது. மந்திரிகளில் முதன் மந்திரியாக இருந்த என் நண்பர் கருணாநிதியின் விட்டுக்கு மட்டும்தான் போவேன். இன்ன நேரத்தில் சந்திப்பதென்று நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து கொண்டுதான் போவேன்.

சந்திரபாபு வீட்டில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு சினிமா நடிகர்களைப் பற்றி எனக்கு ஒரு கெட்ட அபிப்ராயமே ஏற்பட்டது. அளப்பரிய திறமை இருந்தாலும் ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும். 

சந்திரபாபு அளப்பரிய திறமையுடையவர் என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு எல்லையில்லா ஆணவம் இருந்தது. ஆணவத்தால் அழிந்து போனவர்கள் பல பேரை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகிறார்கள்.

சுமார் இருபத்தி ஐந்தாண்டு காலமாக இந்த பட உலகில் சிலரை வளமாகவும் நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.

தம்பி விஸ்வநாதன், மாமா கே.வி.மகாதேவன், டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா, நான் ஆகியோர் எங்கள் தொழிலில் காட்டுகின்ற ஆர்வம், பயம், பணிவு ஆகியவைகள்தான் கால் நூற்றாண்டு காலமாக எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஒரு மெட்டு பிடிக்கவில்லை என்றால் தம்பி விஸ்வநாதன்  பத்து மெட்டுக்கள் போடுவான். டைரக்டர்களுக்கு பிடித்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பான்.

மாமா மகாதேவனும் அதே மாதிரிதான். நானும் மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகின்றவரை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பேன். சுசிலாவும், சவுந்திரராஜனும் பாட்டு நன்றாக அமையும்வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவார்கள்.

எங்களது வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையில் மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை. இந்தத் தொழில் நம்மை கைவிட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே அதற்குக் காரணம்.

இவற்றை எல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாகச்  செய்கின்ற எவனையும் இந்தத் தொழில் கைவிடாது. ஆணவம் பிடித்து மற்றவர்களை அலட்சியப்படுத்தினால் ஒரு நாளைக்கு அவர்களுடைய படிக்கட்டிலேயே ஏறி ஐம்பது ரூபாய் யாசகம் கேட்க வேண்டி வரும்.

பண விஷயத்தில் நான் பிடிவாதம் பிடித்தது இல்லை, பேரம் பேசியதில்லை, ரேட்டை திடீர். திடீரென்று உயர்த்தியதில்லை.  கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்தால் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்.வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் அவர்களாகவே நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள்.

அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் நான் இலவசமாகக்கூட ஒத்துழைப்பேன். அதனால்தான் எனக்குக் கஷ்டம் வரும்போது எல்லோருமே உதவி செய்கிறார்கள்.

ஆணவக்காரர்கள் மட்டுமே தொழிலின்றி அலைகிறார்கள், அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்  என்பதைச் சொல்ல  வேண்டியது எனது கடமையாகிறது” என்று அந்த  நூலிலே குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்

தனது வாழ்நாளில் கவிஞர் யாரையும் அந்த அளவு கடுமையாக விமர்சித்ததே இல்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலே ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடல் உட்பட மிகச் சிறந்த பாடல்கள் பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பாடல்களாலும்  படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. 

முன்பின் தொடர்பில்லாத குழப்பமான கதை, கதாநாயகனாக நடித்த சந்திரபாபுவின் அலட்சியப் போக்கு ஆகிய எல்லாமாகச் சேர்ந்து அந்தப் படத்தை மிகப் பெரிய தோல்விப் படமாக ஆக்கியது. அந்தப் படம் வெளியானபோது ஐந்து லட்சத்து தொண்ணூறு ரூபாய் கடனாளியாகி இருந்தார் கண்ணதாசன்.

அப்போது கண்ணதாசனின் பட நிறுவனத்தில் பதினோரு கார்கள் இருந்தன. அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கார்கள் அனைத்தையும் அந்த கார்களின் மீது யார் யார் கடன் கொடுத்திருந்தார்களோ  அவர்களது வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னார் கண்ணதாசன்.

அடுத்து கம்பெனி இருந்த அலுவலகத்தை  காலி செய்தார். அங்கிருந்த சாமான்கள அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டிலே போட சொன்னார்.

அந்தப் படத்திற்குப் பிறகு பாடல்கள் எழுதி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் கடன்காரர்களுக்கு வட்டித் தொகை செலுத்தவே சரியாக இருந்தது.

சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சேலம் டவுனில் டாக்டர் செரியன் என்று ஒரு  பல் டாக்டர் இருந்தார். அந்த டாக்டருக்கு கைரேகை பார்த்து பலன் சொல்வது என்றால் மிகவும் இஷ்டம்.

அவருடன் ஒரு முறை கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனின் கையைப் பார்த்துவிட்டு “இந்தக் கை லட்சம் லட்சமாக சம்பாதிக்கும். ஆனால் பணம் வருவதற்கு முன்பே கடன் வந்து விடும். ஐம்பது வயதிற்கு மேல் ஐம்பத்தி ஆறாவது வயதிற்குள் நீ சந்நியாசியாகவோ ஏகாந்தத்தை நாடுகிறவனாகவோ ஆகி விடுவாய் என்று அவரிடம் கூறினாராம்.

‘கவலை இல்லாத மனிதன்’ பட தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைப் பார்த்தவுடன் கண்ணதாசனுக்கு அவர் நினைவுதான் வந்தது

கவலை இல்லாத மனிதன்’ என்று படத்திற்கு பெயர் வைத்ததினாலேயே கடவுள் என்னைத் தண்டித்து விட்டார். மனிதன் எப்படி கவலை இல்லாமல் இருக்க முடியும் என்று கடவுள் என்னிடம் சவால் விட்டதாகவே நான் உணர்ந்தேன் என்று ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தை எடுத்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ரஜினிக்காக இன்னும் காத்திருக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி..!

‘கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கதை சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது...

‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை...

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற...

அனுஷ்காவிடமிருந்து சமந்தா தட்டிப் பறிக்கும் படங்கள்..!

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு வயது 40 என்றாலும் அவர் மீதான கிரேஸ் இன்னமும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடத்தில் குறையவே இல்லை. கடைசியாக ‘நிசப்தம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அதிகமான படங்களை...