Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-34 இரண்டு கதாநாயகர்களை வில்லனாக மாற்றிய கதாசிரியர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா துறையில் சூழ்நிலை சரியாக இல்லாததாலும் தாங்கள் தயாரித்த சில திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் சிறிது காலம் படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம். அதிபரான மெய்யப்ப செட்டியார் ஒரு  காலக்கட்டத்தில் மீண்டும் படம் தயாரிக்க திட்ட மிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அறிவித்த இரண்டு படங்களிலும் கதாநாயகன்  கமல்ஹாசன். ஒரு படத்தை  இயக்க கே.பாலசந்தரையும்,  இன்னொரு படத்தை இயக்க  பாரதிராஜாவையும் அவர்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த இரு படங்களையுமே அவர்களால் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை.

அந்த சமயத்தில் ரஜினிகாந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கொடுத்திருந்த கால்ஷீட்டை ஏவி.எம். நிறுவனத்துக்காக  விட்டுக் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம்.சரவணன். சரவணன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பஞ்சு அருணாச்சலம் மறு பேச்சின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். அப்படி உருவான படம்தான் ‘முரட்டுக் காளை.’

அந்தப் படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க யோசனை கூறியவர் பஞ்சு அருணாச்சலம்தான். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் நேராகத்  தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம் இருந்தது.

பஞ்சு அருணாச்சலத்தின் வளர்ச்சியில் ஜெய்சங்கருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதால் “கதாநாயகனான என்னை வில்லனாக நடிக்கச் சொல்லி நீயே கேட்கலாமா..?” என்று ஜெய்சங்கர் தன்னிடம் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் காரணமாக அவருக்குள் எழுந்த தயக்கம் அது.

அதை அவர் ஏவி.எம்.சரவணன் அவர்களிடம் தெரிவித்தபோது “அதனால் என்ன… நானே ஜெய்சங்கரிடம் பேசுகிறேன்…” என்று சொன்ன அவர் உடனடியாக ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு “உங்களை சந்திக்க வேண்டுமே ஜெய்” என்றார். “நான் ஏவி.எம். அருகேதான் இருக்கிறேன். இன்னும் பத்து நிமிடத்தில் நானே அங்கு வருகிறேன்…” என்று சொன்ன ஜெய்சங்கர் சொன்னபடி வந்தார்.

” நாங்கள் ரஜினிகாந்தை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் ‘முரட்டுக் காளை’படத்தில் வித்தியாசமான ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான், பஞ்சு, முத்துராமன் ஆகிய அனைவரும் நினைக்கிறோம்…”என்று சரவணன் அவர்கள் சொன்ன அடுத்த நிமிடமே, “நான் நடிக்கிறேன்…” என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர்.  

“நீங்கள் நன்கு யோசித்து உங்கள் முடிவை சொன்னால் போதும்” என்று சரவணன் சொன்னபோது, “இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இங்கு இருக்கும் நீங்கள், பஞ்சு, முத்துராமன் ஆகிய மூவருமே என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள். எனக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய விஷயத்தை செய்யச் சொல்லி நீங்கள் யாராவது சொல்வீர்களா..? அதனால்தான் யோசிக்காமல் நான் சரி என்று ஒப்புக் கொண்டேன்…” என்று ஜெய்சங்கர் சொன்னபோது நண்பர்கள் மேல் ஜெய்சங்கர் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்து அந்த மூவருமே அசந்து போனார்கள்.

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக் காளை’யில்  வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ஏவி.எம். நிறுவனத்துக்காக ரஜினி நடித்த இன்னொரு படமான ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம்  என்ற யோசனையையும்   எம்.சரவணன் அவர்களுக்கு சொன்னவர்  பஞ்சு அருணாச்சலம்தான்.

“நல்ல யோசனை” என்று அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்ட சரவணன் அவர்கள்   “முத்துராமனைப்  பார்த்து பேசி அவரை   ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார்.

அப்போது கதாநாயகனாக நடிக்கின்ற   வாய்ப்புகள் முத்துராமன்  அவர்களுக்கு குறைந்திருந்த நேரம்.  குணச்சித்திர வேடங்களுக்கு மாறியிருந்தார் என்றால் அப்போதே பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ அப்படி எந்த வாய்ப்பையும் ஏற்காமல் திரையுலகைவிட்டு  ஒதுங்கி இருந்தார் அவர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்படி ஒரு வில்லன் பாத்திரத்தில் நடிப்பது பற்றி பேசத்தான் பஞ்சு அருணாச்சலம் தன்னை சந்திக்க வருகிறார் என்று  முத்துராமனுக்கு தெரியாது என்பதால் பஞ்சு அருணாச்சலம்  கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மிகப் பெரிய குழப்பத்திற்கு ஆளானார் அவர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ‘பஞ்சு, நீங்க வீடு தேடி வந்து என்னைக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி.  ஆனா, சினிமா, நாடகம் என்று இத்தனை வருஷம் தொடர்ந்து நடித்துவிட்டேன். இப்ப  வசதி வாய்ப்போடு செட்டிலாகி நிம்மதியா  ரெஸ்ட் எடுத்துட்டிருக்கேன்.

இவ்வளவு நாள் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிச்சிட்டு  இப்ப கடைசியில் வில்லனா நடிச்சு ஹீரோகிட்ட எதுக்கு அடி வாங்கணும்னுதான் நான் யோசிக்கிறேன்…” என்றார் முத்துராமன்.

“நீங்க ஏன்  வில்லன்னா அப்படி  நினைக்கறீங்க. நெகட்டிவாக  இருந்தாலும் அது ஒரு நல்ல  கேரக்டர். அதனால்  யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

இன்னொன்றையும் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும். அதுக்கு அப்புறம் பத்து சினிமா கம்பெனி கார்கள் தினமும் உங்க வீட்டு வாசல்ல கியூவில் நிற்கும். அதனால், எனக்காக நீங்கள் இந்தப் படத்தில் நடியுங்கள்.எல்லாம் சரியாக  வரும்…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன்  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார்  பஞ்சு. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப்படத்தின் படப்படிப்பு முடிவடையும் முன்னரே ஒரு படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றிருந்த  முத்துராமன் இறந்துவிட்டதால் அவருடைய பாத்திரம் அந்தப் படத்திலே சிறப்பாக அமையவில்லை.                       

‘போக்கிரி ராஜா’வைத் தொடர்ந்து  ஏவி.எம். நிறுவனத்துக்காக பஞ்சு அருணாச்சலம்  பணியாற்றிய ரஜினிகாந்த் படமாக ‘பாயும் புலி’ அமைந்தது.  தனது தங்கையைக் கொன்றவனை கதாநாயகன்  பழி வாங்குகின்ற அந்தக் கதையில் கராத்தே கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.

அந்தப் படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி விவாதம் வந்தபோது ஜெய்சங்கர், முத்துராமன் ஆகிய இரு கதாநாயகர்களை வில்லனாக ஆக்க யோசனை தந்த பஞ்சு அருணாச்சலம் ‘பாயும் புலி’ படத்தில் வில்லனாக நடிக்க ஒரு இயக்குநரின் பெயரை பரிந்துரைத்தார். அந்த இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

எம்.சரவணன் அவர்களின் நெருங்கிய நண்பரான ஏ.சி.திருலோகச்சந்தர் நிச்சயமாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தெரிந்திருந்தபோதிலும் “வில்லனாக நடிக்கிறீர்களா..?” என்று அவரைக் கேட்டார் சரவணன்.

 “என்னை விட்டுவிடுங்கள். நான் இயக்குநராகவே இருந்து விடுகிறேன்..” என்று சொல்லி அந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார் அவர். அடுத்து அந்தப் பாத்திரத்திலே நடிக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கராத்தே மணி.

முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட அவர் சில நாட்களுக்குப் பிறகு “கராத்தே மாஸ்டரான நான் நடிப்பிற்காக தோற்றால்கூட மாணவர்கள் மக்தியில் என்னுடைய இமேஜ் பாதிக்கப்படும்” என்று கூறி அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.

அதை அடுத்து ‘முரட்டுக் காளை’ படத்தில் வில்லனாக நடித்த ஜெய்சங்கரையே அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று எல்லோரும் முடிவு செய்ய ஜெய்சங்கருக்கு அழைப்பு சென்றது.

“என்ன கராத்தே மணி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரா…?” என்றபடியே  ஏவி.எம். நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜெய்சங்கர்.

பின்னர் நடந்தது எல்லாவற்றையும் அவருக்கு விளக்கமாகக் கூறி “வில்லன் பாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டவுடன் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து சரவணன் அவர்களிடம் நீட்டினார் அவர்.

அந்தக் காகிதத்தில் “கராத்தே மணியால் ஏவி.எம். நிறுவனத்துக்கு ஏதோ சிக்கல். அதனால் அந்த பாத்திரத்தில் நடிக்கத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளப் போகிறேன்…” என்று எழுதி வைத்திருந்தார் அவர்.

“அன்று காலைவரை அந்தப் பாத்திரத்துக்காக அவரை அழைக்கப்  போகிறோம் என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், அவர் எப்படி எல்லாவற்றையும் சரியாக கணித்து எழுதியிருந்தார் என்று எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யம்” என்று அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News