Friday, April 12, 2024

ஒரே நேரத்தில் ஓடிடி-தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது சாத்தியம்தானா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தில் ஓடிடியின் வளர்ச்சி தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தந்தாலும், தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தின் யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழையபடி ரசிகர்களின் வருகை அதிகரிக்கத் துவங்கினால் பட அதிபர்கள் தங்களைத் தேடித்தான் ஓடி வரப் போகிறார்கள் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டர்களிலும் வெளியிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு சம்மதித்தால் படங்களை தியேட்டருக்குக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் தியேட்டர்களில் வசூலாகும் பணத்தில் முக்கால்வாசியை கூடுதலாக ஓடிடி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டு ஓடிடியிலேயே படத்தை வெளியிட்டு விடலாம் என்று எண்ணி வருகிறார்கள்.

ஆனால், இது மிகப் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள், பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. 100-க்கு 5 சதவிகிதப் படங்கள் மட்டுமே இப்போது ஓடிடிக்கு செல்கின்றன. மற்ற 95 சதவிகித படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க மறுக்கின்றன.

அவர்களை தரம் இல்லாதவை.. அல்லது ஸ்டார் வேல்யூ இல்லாதவை.. மக்கள் பார்வைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாதவை என்று எதையாவது சொல்லி இவைகளை புறக்கணிக்கின்றன ஓடிடி தளங்கள். இந்த மாதிரியான படங்களுக்கு இனிமேல் தியேட்டர்களைவிட்டால் வேறு வழியில்லைதான்.

ஆனால் அங்கும் இருக்கும் ஒரு சிக்கல்.. இது மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள்.. அறிமுகம் இல்லாதவர்கள் நடித்திருக்கும் படங்கள்.. போன்றவைகளுக்கு ரசிகர்களிடையே ஆதரவே இல்லை. தியேட்டர்களில் கூட்டமே வருவதில்லை. பின்பு எப்படி அந்தப் படங்களை தியேட்டர்காரர்கள் போடுவார்கள்..?

அதே நேரம் ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டரிலும் படத்தை வெளியிட்டால் அது தியேட்டர் வசூலை பெரிய அளவுக்கு பாதிக்கும் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. இது நடந்துள்ளது ஹாலிவுட்டில்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்த Godzilla vs. Kong, Mortal Kombat  படங்களை திரையரங்குடன் சேர்த்து, HBO Max தளத்திலும் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவில் திரையரங்குகள் வைத்துள்ள பல நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. “வரும் காலங்களில் வார்னர் பிரதர்ஸின் படங்களை திரையிட மாட்டோம்..” என எச்சரித்தன. 

இந்நிலையில் டிஸ்னி நிறுவனமும் தனது புதிய படமான Black Widow-வை கடந்த ஜுலை 9-ம் தேதி திரையரங்கிலும், டிஸ்னி ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவின் National Association of Theatre Owners (NATO) கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும் எதிர்ப்பை மீறி படம் இரு முறைகளிலும் வெளியானது. முதல் வார இறுதியில் ‘பிளாக் விடோ’ யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 80 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கொரோனா பேரிடருக்குப் பிறகு முதல் வார இறுதியில் அதிக தொகையை வசூலித்த திரைப்படம் என்ற பெருமை ‘பிளாக் விடோவு’க்கு கிடைத்தது.

ஆனால், இரண்டாவது வார இறுதியில் இந்த வசூல் 69 சதவீதம் குறைந்து, வெறும் 26 மில்லியன் டாலர்களை மட்டுமே ‘பிளாக் விடோ’ வசூலித்தது. இந்த வசூல் வீழ்ச்சிக்கு படத்தை டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியிட்டதுதான் காரணம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

“இந்தப் போக்கு தொடர்ந்தால், டிஸ்னியின் படங்களை இனிமேல் வெளியிட மாட்டோம்” என சில திரையரங்கு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே திரையரங்குகள் செயல்படுகின்றன. அதுவும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திரையரங்குகளில் படத்தை எப்படி வெளியிட முடியும்…?

திரையரங்கு உரிமையாளர்களின் எச்சரிக்கையை படத் தயாரிப்பாளர்கள் பொருட்படுத்துவார்களா என தெரியவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு திரையரங்குகளின் கை ஒருவேளை  ஓங்கலாம். அதுவரை ஓடிடிக்கு அவர்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இதுதான் தற்போதைய யதார்த்த கள நிலவரம்.

- Advertisement -

Read more

Local News