சிம்பொனி இசையில் பெரும் சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய பயோபிக் திரைப்படத்தின் துவக்க விழா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் நடந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதற்கான அறிவிப்பு சில போஸ்டர்களுடன் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ஆனால், இந்த விழாவிற்குப் பிறகு படம் பற்றிய எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் தான் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார் என கூறப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டின் இறுதியில் இந்தப் படம் ‘டிராப்’ ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. இப்படத்தை இணைந்து தயாரிக்க இருந்த நிறுவனம், பட்ஜெட் பிரச்சினை காரணமாக விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை படத்திற்க்கான முன்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குழு தரப்பு தெரிவித்திருந்தது..இந்நிலையில், இப்படம் தொடர்பான ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் டில்லியில் தனுஷை சந்தித்தது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.


அந்த பதிவில், “டில்லி விமானத்தில் பயணித்தபோது, அதே விமானத்தில் பயணித்த நடிகர் தனுஷ் அவர்களுடன் விசிக தலைவரும் நானும் உரையாடினோம். இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் எந்த நிலையில் உள்ளது என்று கேட்டபோது, “இன்னும் அந்தப் ப்ராஜெக்ட் இறுதி செய்யப்படவில்லை” என பதிலளித்தார். இதுவே, இந்திப் படத்திற்காக வந்திருப்பதாகவும் கூறினார். அத்துடன், இந்தியில் பாடுவீர்களா? என கேட்டபோது, “ஆமாம்” என்றார். அவருடைய தமிழ் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. இந்தப் புகைப்படங்கள் கடந்த திங்கள்கிழமை டில்லி விமான நிலையத்தில் எடுத்தவை. பார்லிமென்ட் பணிகளில் இருந்த நெருக்கடியால் இதை உடனடியாக பகிர மறந்துவிட்டேன்.”* எனக் குறிப்பிட்டுள்ளார்.