‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பம்பர்’. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.
கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் வெற்றி பேசியதாவது, “முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குனர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போல, படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது” என்றார்.