சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ள படம் ‘டீசல்’. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.14) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், ஒரு சில நாட்களுக்கு முன்பு தேவா (டீசல் பட தயாரிப்பாளர்) சாரிடம், ‘இந்தப் படம் தீபாவளிக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது? பெரிய ஹீரோ இருக்கிறாரா, பெரிய இயக்குநர் இருக்கிறாரா, பெரிய இசையமைப்பாளர் இருக்கிறாரா என்று கேட்டார்கள். உண்மையில் இதுபோன்றா கேட்டதும் என் மனது உடைந்தது அவரிடம் என்றேன். தீபாவளிக்கு படம் வெளியாக என்ன தகுதி தேவை என எனக்குத் தெரியவில்லை.
ஒரு நல்ல படம், அதை நன்றாக விளம்பரப்படுத்தும் குழுவும் இருந்தால் கண்டிப்பாக வரலாம். அதையே நம்பிய நம்பிக்கையுடன், தீபாவளிக்கு ஒரு நல்ல, சுவாரஸ்யமான, பொழுதுபோக்கான ‘டீசல்’ படத்துடன் நாங்கள் வருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் வணங்கும் இறைவனும், பார்வையாளர்களும் எங்களை கைவிட மாட்டார்கள், கையை பிடித்து கூட்டி செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன். யாரையும் குறைத்து எடை போடாதீர்கள் என்றுள்ளார்.