Friday, April 12, 2024

“ஓடாத தியேட்டருக்கு எப்படி சொத்து வரி கட்ட முடியும்?” – தியேட்டர் உரிமையாளர்கள் கேள்வி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“சினிமா தியேட்டர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு மற்றும் வருடந்திர லைசென்ஸ் ஆகியவற்றில் சலுகைகள் வேண்டும்…” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான திருச்சி ஸ்ரீதர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில்,

“தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 8 மாதங்கள்தான் திரையரங்குகள் திறந்திருந்தன. வசூலும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் வருடா, வருடம் திரையரங்கு உரிமையாளர்கள் கட்ட வேண்டிய சொத்து வரி மட்டும் அதே அளவில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா லாக் டவுன் காலக்கட்டத்தை மனதில் வைத்து தமிழக அரசு எங்களது தியேட்டர்களுக்கான சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இயங்காத, செயல்படாத, வருவய் வராத நிலையில் தியேட்டர்காரர்கள் எங்கேயிருந்து வரி கட்டுவார்கள்..? தமிழக அரசு இதை மனதில் வைத்து எங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

தியேட்டர்களுக்கு வருடா வருடம் தரப்படும் லைசென்ஸ் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வருடா வருடம் தருவதற்குப் பதிலாக ஒரேயொரு முறை கொடுத்தாலே போதும் என்ற நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 6 அரசுத் துறையினரிடம் சான்றிதழ் வாங்கி அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து அதன் பின்பு அவர் எங்களுக்கு அனுமதியை வழங்கி வருகிறார். இது தற்போதைய நடைமுறைப்படி அரசுக்கும், எங்களுக்குமே பெரும் சிரமத்தைத் தந்து வருகிறது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே மாயவரத்தில் இருக்கும் ஒரு திரையங்கு 13 மாதங்களுக்கு முன்பேயே லைசென்ஸை புதுப்பிக்க விண்ணப்பித்தும் இன்றுவரையிலும் அது கிடைக்கவில்லை. இன்னும் பல ஊர்களில் தியேட்டர்காரர்கள் லைசென்ஸை புதுப்பிக்க விண்ணப்பிக்கவே இல்லை.

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தினால், அரசு அலுவலகங்கள் முழு வீச்சில் செயல்படாத காரணத்தினாலும், வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளதினாலும் தியேட்டர் அதிபர்கள் இதில் முனைப்புக் காட்ட முடியவில்லை.

தற்போது தமிழக அரசு தியேட்டர்களை திறக்கலாம் என்று அனுமதியளித்தாலும்கூட உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல ஊர்களில் தியேட்டர்களை திறக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. எனவே அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தியேட்டர்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தியேட்டர்கள் திறக்கப்படாத இந்தச் சூழலிலும் தியேட்டர் அதிபர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்கள். மேலும் தமிழகம் முழவதும் தியேட்டர்களில் பணியாற்றும் ஏஜெண்டுகளின் வாழ்க்கையும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு மற்றைய திரைப்பட அமைப்புகளுக்கு வாரியம் அமைத்து அவர்களுக்கு உதவி செய்வதுபோல, தியேட்டர் ஊழியர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் பொதுவான ஒரு வாரியத்தை அமைத்து அவர்களுக்கும் வேண்டிய நலத்திட்ட உதவிகளை வழங்கும்படி எங்களது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News