Friday, April 12, 2024

தமிழ் சினிமா வரலாறு-63 – “சவுகார் ஜானகி நடிக்கலைன்னா நான் எழுத மாட்டேன்” – வசனகர்த்தாவின் பிடிவாதம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழம் பெரும் இயக்குநர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ‘ப’ வரிசைப் படங்களில்  பல படங்கள் காலத்தைக் கடந்து இன்றைக்கும் தமிழ்த் திரை ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் அமைந்த ஒரு வெற்றிச் சித்திரம்தான் ‘படிக்காத மேதை.’

அந்தப் படத்தின் வெற்றியில் சிவாஜி, ரங்காராவ், சவுகார் ஜானகி ஆகியோருக்கு உள்ள பங்கிற்கு இணையானது அந்தப் படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பங்கு.

ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளரான என்.கிருஷ்ணசாமி அந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத முதலில் கே.எஸ். கோபாலகிருஷ்ணனைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவரது குருவான ஸ்ரீதரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால், அந்தப் படத்திற்கு வசனம் எழுத  கோபாலகிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தவர்கள் இயக்குநர் ஸ்ரீதரும், அந்தப் படத்தின் நாயகனான சிவாஜி கணேசனும்தான்.  

‘ஜோக் பி ஜோக்’  என்ற பெயரிலே வெளிவந்து வெற்றி பெற்றிருந்த  வங்காள மொழிப் படத்தைத் தமிழில் தயாரிக்கின்ற உரிமையை வாங்கியிருந்த பாலா மூவீஸ் கிருஷ்ணசாமி அந்தப் படத்திற்கு ஸ்ரீதர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்  அவருக்கு அந்தப் படத்தைத்  திரையிட்டுக் காட்டினார்.

“நீங்கள் இந்தப் படத்திற்கு வசனம் எழுதினால் இந்தப் படம் பெரிய வெற்றியைப்  பெரும் என்று நான் நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்று ஸ்ரீதரிடம் அவர் கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீதர் அந்தப் படத்தைப் பார்த்தார்.

படத்தைப் பார்த்த ஸ்ரீதருக்கு அந்தப் படத்தின் கதை மிகவும் பலவீனமாக இருப்பதாகத்  தோன்றியது. தமிழ் நாட்டு பாணிக்கு ஏற்ப அந்தக் கதைக்குத்  திரைக்கதை அமைத்து அதை வெற்றிப் படமாக ஆக்குவது மிகவும் கடினம்  என்று அவர் எண்ணினார்.

ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது பல படங்களுக்கு கதை, வசனம் எழுத நான் ஒப்புக் கொண்டுள்ளதால் இந்தப் படத்தில் பணி புரிய முடியாத சூழ்நிலையில் நான் இருக்கறேன்” என்று சுற்றி வளைத்து ஒரு பதிலை கிருஷ்ணசாமிக்குச்  சொன்னார் ஸ்ரீதர்.

“அப்படி என்றால் யார் வசனம் எழுதினால் இந்தப் படம் தமிழுக்கு சரியாக வரும் என்று நீங்களே ஒரு கதாசிரியர் பெயரைச்  சொல்லுங்கள்” என்று கிருஷ்ணசாமி கேட்க “என்னிடம் உதவியாளராக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்” என்று கூறிவிட்டு ஒருவாறாக அந்த படத்தில்  இருந்து தப்பித்துக் கொண்ட சந்தோஷத்தில் அந்த தியேட்டரை விட்டு கிளம்பிவிட்டார் ஸ்ரீதர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை சந்திப்பதற்கு முன்பாக சிவாஜி கணேசனை சந்தித்த கிருஷ்ணசாமி அவருக்கு படத்தைக் காட்டினார். அந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் சிவாஜிக்கு மிகவும் பிடித்துப் போனதால் படத்தில் நடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்த அவர் நல்ல அனுபவம் உள்ள திறமை வாய்ந்த டைரக்டர்களால்தான் அந்தப் படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று கிருஷ்ணசாமியிடம் கூறியதோடு நிற்காமல் அப்படிப்பட்ட சில இயக்குநர்களின் பெயரையும் அவரிடம் கூறி அவர்களிடம் பேசுமாறு கூறினார்.

அதைத் தொடர்ந்து சிவாஜி குறிப்பிட்ட அந்த இயக்குநர்கள் அனைவரையும் கிருஷ்ணசாமி சந்தித்தார். அவர் சொன்ன அத்தனை இயக்குநர்களும் ஒரே குரலில் அந்தக் கதை தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவிட அதை அப்படியே சிவாஜியிடம் தெரிவித்தார் கிருஷ்ணசாமி. 

அவர் அப்படி சொன்னதும் லேசான குழப்பத்தில் ஆழ்ந்த சிவாஜி சிறிது நேரத்திற்குப் பிறகு “நீங்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு  அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். அவருக்கு இந்தக் கதை பிடித்து அவர் திரைக்கதை வசனம் எழுத ஒப்புக் கொண்டு விட்டால் அதற்குப் பிறகு இயக்குனர் பெயரை நான் சொல்கிறேன்..” என்றார்.  ஸ்ரீதர், சிவாஜி ஆகிய இருவருமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பெயரைச் சொன்னதால் அடுத்தபடியாக  அவருக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார் கிருஷ்ணசாமி.

படத்தைப் பார்த்த   கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  எல்லா இயக்குநர்களும் அந்த படத்தைப் பற்றி சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைச் சொன்னார். “அற்புதமான கதை. இப்படிப்பட்ட உயிரோட்டமான கதைக்கு திரைக்கதை, வசனம் எழுத நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவர் அப்படி சொன்னவுடன் அத்தனை இயக்குநர்கள் நிராகரித்த அந்தக் கதை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மட்டும் எதனால் கவர்ந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பிய கிருஷ்ணசாமி, “என்ன காரணத்தினால் இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருக்கிறது..?” என்று அவரிடம் கேட்டார்.

 “இதில் வரும் ராவ்பகதூர் பாத்திரமும், ரங்கன் பாத்திரமும் மிகவும் புதுமையானது மட்டுமல்ல; கதைக்கு உயிரூட்டக் கூடியது. இந்த இரண்டு பாத்திரங்களையும் வைத்துக் கொண்டு எத்தனை படங்கள் வேண்டுமானால் எடுக்கலாம்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவர் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடமே படத்துக்கு வசனம் எழுத அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார் கிருஷ்ணசாமி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டுவிட்ட செய்தியை கிருஷ்ணசாமி சிவாஜியிடம் தெரிவித்தபோது படத்தை இயக்க பீம்சிங்கை ஒப்பந்தம் செய்யுமாறு சிவாஜி பரிந்துரைத்தார்.

‘படிக்காத மேதை’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க சில நாட்கள் இருக்கும்போது அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க அப்போது கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த சில நடிகைகளின்  பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக  செய்தி வந்ததும் அதிர்ந்து போனார் கோபாலகிருஷ்ணன்.

“இந்தப் படத்தின் நாயகனான அப்பாவி ரங்கனுக்கு ஜோடியாக கவர்ச்சி யாக நடிக்கக் கூடிய எந்த நடிகை நடித்தாலும்  நிச்சயமாக படம் பெரிய தோல்வியை சந்திக்கும். அன்பு, கருணை, பாசம், இரக்கம் ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் அமைதியாக வெளிப்படுத்தும் தாய்மையின் சின்னமாக நான் உருவாக்கியுள்ள ரங்கனின் மனைவியின் பாத்திரத்திற்கு சவுகார் ஜானகியைத் தவிர வேறு எந்த நடிகையையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆகவே அவரைத் தவிர வேறு எவரையும் கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்துவிடாதீர்கள்…” என்று தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியிடம் தெளிவாக எடுத்துச் சொன்னார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

அவர் சொன்னதைப் பற்றி யோசிப்பதாக கிருஷ்ணசாமி சொன்ன போதிலும் கோபாலகிருஷ்ணனின் கருத்தில் அவருக்கு மிகப் பெரிய உடன்பாடு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட கோபாலகிருஷ்ணன் சவுகார் ஜானகியைத் தவிர வேறு யாரையாவது ஒப்பந்தம் செய்ய அவர் முடிவெடுத்தால் அந்தப் படத்திலிருந்து விலகி விடுவது என்று முடிவெடுத்தார்.

பின்னர் அந்தப் படத்திற்கு வசனம் எழுத  தன்னைப் பரிந்துரைத்த சிவாஜி கணேசனிடம் தன்னுடைய முடிவைத் தெரிவிப்பதற்காக அவரை சந்திக்க நெப்ட்யூன் ஸ்டுடியோவிற்குச் சென்றார். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்படிப்பு அங்கே நடந்து கொண்டிருந்தது.

கோபாலகிருஷ்ணன் ஸ்டுடியோவிற்குள்ளே நுழைந்தபோது சிவாஜி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் பீம்சிங், படிக்காத மேதை படத்தின் தயாரிப்பாளரான என்.கிருஷ்ணசாமி, உதவி இயக்குநர்கள் ஆகியோர் அமர்ந்து கொண்டிருந்தனர்.

சிவாஜிக்கு வணக்கத்தைத் தெரிவித்த கோபாலகிருஷ்ணன் அத்தனை பேருக்கு நடுவே கதாநாயகியைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. ஆகவே சிவாஜியிடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கும்போது  தன்னுடைய முடிவை அவரிடம் சொல்லலாம்  என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ”வாப்பா” என்று அவரை வரவேற்ற சிவாஜி “படிக்காத மேதை  படத்தில் சவுகார் ஜானகியைத்தான் கதாநாயகியாக போடணும்னு மொத்த யூனிட்டும் சொல்லும்போது நீ மட்டும் அவர் வேண்டாம் என்று சொல்கிறாயாமே..? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டவுடன் கோபாலகிருஷ்ணனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முதலில் சிறிது நேரம் தவித்த கோபாலகிருஷ்ணன் உங்களிடம் யார் அப்படி தவறாக சொன்னது என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட படத்தின் கதாநாயகியாக யார் நடிக்க  வேண்டும் என்று  சிவாஜி எண்ணுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம் என்று நினைத்தார்.

அதனால் “நானே மற்றவர்களோ சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அப்பாவி ரங்கனின் மனைவியாக நடிப்பதற்கு ஏற்ற கதாநாயகி யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்” என்று சிவாஜியிடம் கேட்டார். “சந்தேகமென்ன சவுகார் ஜானகிதான் அந்த வேடத்துக்குத் தகுதியானவர்” என்று சிவாஜி சொன்னவுடன் கோபாலகிருஷ்ணன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை  

அந்தப் படத்தில் சவுகார் ஜானகிதான் கதநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு  வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்தார் சவுகார் ஜானகி.

கே.எஸ்.கோபால கிருஷ்ணனின்   திரையுலக அனுபவத்தில் அவரால் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News