அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம், இன்னும் 15 நாட்களில் திரைக்கு வர உள்ளது. இதையொட்டி, இப்படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின் ‘ஓஜி சம்பவம்’ என்கிற பாடல் வெளியானதும் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அடுத்ததாக இரண்டாவது பாடலும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர், ‘குட் பேட் அக்லி’ படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை புரியும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “குட் பேட் அக்லி என்பது தமிழில் உருவாகும் மிகவும் பரபரப்பான படமாகும். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் முதல் நாள் வசூலைவிட, இந்தப் படம் அதிக வசூலுடன் சாதனை படைக்கும். இது என்னுடைய கருத்து அல்ல, தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் கூறும் வார்த்தைகள்,” என தெரிவித்துள்ளார்.