முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து (77வயது) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 19) காலை காலமானார்.

கருணாநிதி – பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த மூத்த மகனான முத்து, தமிழ்த் திரைப்படங்களில் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். நடிப்பைத் தவிர, தனது சொந்தக் குரலில் பாடல்களும் பாடியுள்ளார். 2012ம் ஆண்டு வெளியான ‘மாட்டுத்தாவணி’ படத்தில் தேவா இசையில் ‘அன்னமாரே’ என்ற பாடலை பாடியிருந்தார்.
அவரது மறைவையொட்டி, அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தனது சகோதரான மு.க.முத்துவுக்கு அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்துவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.