இந்த 2021 வருட பொங்கல் தினத்தை மறக்க முடியாதபடிக்கு செய்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.
அந்த வைரஸின் தாக்கம் அகில உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருப்பதால் தமிழ்ச் சினிமாத் துறையில் அதில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த 2021 பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ திரைப்படமும், ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளன.
இதில் ‘மாஸ்டர்’ படம் திடீரென்று இணையத்தில் லீக்காகத் துவங்க கோடம்பாக்கமே பெரும் பரபரப்பில் இருக்கிறது.
இந்தப் பரபரப்பு முடிவதற்குள் இன்னொரு பக்கம் “ஈஸ்வரன்’ படத்தைத் திரையிட மாட்டோம்…” என்று தமிழகத்தில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவிக்க விக்கித்துப் போய் நிற்கிறது கோடம்பாக்கம்.

‘ஈஸ்வரன்’ படத்திற்குத் தடை விதிக்கக் காரணம் “அந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் அதே நேரம் ஓடிடி தளத்திலும் வெளியாகும்…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்ததுதான். அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஓடிடி தளத்தில் இந்தியாவைத் தவிர்த்த வேறு வெளிநாடுகளில்தான் ‘ஈஸ்வரன்’ படத்தைப் பார்க்க முடியும் என்று ஏற்பாடாகியிருந்தது.
இந்த அறிவிப்பை கேள்விப்பட்டவுடன் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது சங்கத்தின் நிர்வாகக் குழுவைக் கூட்டியவர் தடாலடியாக ‘ஈஸ்வரன்’ படத்திற்குத் தமிழகம் முழுவதும் தடை விதித்தனர். இந்தத் தடையை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வம் ஆடியோ வாயிலாக வெளியிட்டார்.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்தத் திடீர் முடிவை முற்றிலும் எதிர்பார்க்காத ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரான மாதவ், வேறு வழியில்லாமல் தனது முடிவை உடனடியாக மாற்றிக் கொண்டார்.
“ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படும். ஓடிடி தளத்தில் வெளியிடப்படாது…” என்றும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அறிவித்துவிட்டார்.
இனிமேல் தியேட்டர் உரிமையாளர்கள் தாங்கள் அறிவித்த தடையை நீக்குவார்களா..? இல்லையா..? என்பது நாளை காலையில்தான் தெரியும்..!
“ஒரு படத்தைத் தியேட்டருக்கு கொண்டு வருவதற்குள் தயாரிப்பாளர்கள் செத்துப் பிழைக்கிறார்கள்…” என்று அடிக்கடி சினிமா மேடைகளில் பல அனுபவசாலி தயாரிப்பாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.
இதோ.. இப்போது நேரிலேயே பார்க்கிறோம்..!