2015-ம் ஆண்டு, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இப்படத்தில் அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து, ‘டிமான்ட்டி காலனி 2’ கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு வந்தது.

இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசை வழங்கினார். இப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்து, ரூ.90 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியது.
‘டிமான்ட்டி காலனி 2’ படம் மிகுந்த வெற்றியை பெற்றதையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து, இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என்று அறிவித்தார். இதனால், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் திரைக்கு வரும் நாள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கான புதிய அப்டேட் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது