சினிமா வரலாறு-76 சினிமா தியேட்டரிலிருந்து வி.என்.ஜானகியைக் கடத்திய அவரது மாமா

எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த கடிதத்தை  ஒரு முறைக்கு இரண்டு முறை படித்த ஜானகி,  “இன்னும் இரண்டு  மாதங்களில் பலதார தடைச் சட்டம் வரப் போவதாக அவர் எழுதியிருக்கிறாரே. அப்படி ஒரு சட்டம் வரப் போவது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று தனது மாமாவிடம் கேட்டார் .

“எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது” என்று அலட்சியமாக பதிலளித்தார் அவர். அப்படி அவர் பதிலளித்தவுடன்  “இனிமேல் நீங்கள் என்னை  நேரிலேயே சந்தித்துப் பேசலாம். நமது திருமணம் சட்டபூர்வமான திருமணமாக இருக்க வேண்டும். ஆகவே உடனடியாக பெரிய வக்கீல் ஒருவரைப் பார்த்து பேசுங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்தார் ஜானகி.

ஜானகி கேட்டுக் கொண்டபடி வக்கீல் ஒருவரை சந்தித்த எம்.ஜி.ஆர். தன்னுடைய பிரச்னையை அவரிடம்  விளக்கமாகச்  சொன்னவுடன்  “இனி உங்களது சம்மதம் இல்லாமல் எந்த கடிதத்திலும் கையெழுத்து போட வேண்டாம் என்று அவருக்கு சொல்லுங்கள்…” என்றார்  வக்கீல்.

ஏற்கனவே பல காகிதங்களில் ஜானகியிடம் அவரது மாமா கையெழுத்து வாங்கி வைத்து இருக்கின்ற  விஷயத்தை எம்.ஜி.ஆர் அந்த வக்கீலிடம் சொன்னதும் சிரித்த அவர்  “ஜானகிக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று எம்ஜிஆரிடம் கேட்டார். ”தெரியாது” என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன் ”அப்படிஎன்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால், இனிமேல் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இந்தச் சம்பவம் நடந்த சில  நாட்களுக்குப் பிறகு ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆருக்கு வந்த கடிதத்தின் உள்ளே இன்னொரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதம் ஜானகி கணக்கு வைத்துக் கொண்டிருந்த வங்கியிலிருந்து அவருக்கு அனுப்பபட்ட கடிதம்.

“உங்களது கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி உங்களது கணக்கில் இருந்த பணத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றியாகி விட்டது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சியான எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வக்கீலிடம் ஓடினார்.

அந்தக் கடிதத்தைப் பொறுமையாகப் படித்த வக்கீல் ”இது மோசடி வழக்கு. இந்த குற்றத்துக்கு  அவரது மாமா மீது கிரிமினல் வழக்கு தொடரலாம். ஆனால் இதன் மேல் எந்த மேல் நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னாலே ஜானகியைப் பார்த்து சில விவரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வழக்குத் தொடர்ந்த பிறகு ஜானகி அவரது மாமாவின் பக்கம் சேர்ந்து கொண்டார் என்றால், நாம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்” என்றார்.

அந்த நிலையில் தமிழ் வருட பிறப்பிற்கு முதல் நாள் காலையில் ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆருக்கு  மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அன்று மாலையில்  நாகரத்தினம், மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவரோடும் தான் “மாயக் குதிரை” படம் பார்க்க தியேட்டருக்கு போகப் போவதாக அதில் எழுதியிருந்தார் ஜானகி.

வருட பிறப்பு அன்று தான் கட்டிக் கொள்ள மாமா புதுப் புடவை எடுத்து வைத்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஜானகி முன்பு போல அவர் தன்னிடம் அவர்  கண்டிப்பாக இருப்பது இல்லை என்றும், தான் தொடர்ந்து  கடிதம்  எழுதுவதுகூட அவருக்குத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எத்தனை நாட்கள்தான் ஜானகியும்  வீட்டிலேயே அடைந்து கொண்டிருப்பார் என்று எண்ணிய எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு போய் வரும்படி அந்த வேலைக்காரப் பையன் மூலமே ஜானகிக்கு செய்தி அனுப்பினார். ஆனால், அதே சமயம் அவர்கள் சினிமாவிற்குப் போனபோது அவர்களைப் பின் தொடர வேலைக்காரப் பையனை அனுப்பி வைக்க அவர் தவறவில்லை. அவர் உள் மனதிற்குள் இருந்த ஏதோ உறுத்தல்தான் ஜானகியைத் தொடர்ந்து அந்தப் பையனை அனுப்பும்படி அவருக்குச்  சொன்னது. அவரது அந்த உறுத்தல் நியாயமானதுதான் என்பதை அடுத்து நடந்த சம்பவங்கள் உறுதி செய்தன.  

இரவு எம்.ஜி.ஆர் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது “படம் பாதி முடிவடைவதற்கு முன்னாலேயே  காரில் ஏறிக் கொண்டு அவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள்” என்று சொன்ன அந்த பையன் அத்துடன் நிற்காமல் அந்தக் கார் அவர்களுடைய வீட்டுக்குப் போகவில்லை என்றும் வெளியூர் செல்லும் பாதையில் வேகமாகச் சென்றுவிட்டதால் தன்னால் அந்தக் காரைத் தொடர்ந்து போக முடியவில்லை  என்றும்  அடுக்கடுக்கான அதிர்ச்சித்  தகவல்களைச்  சொன்னான்.  

அதைக் கேட்டவுடன் வெறி பிடித்தவர் போல ஆனார் எம்.ஜி.ஆர். ஜானகிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப் போகிறது என்று பயந்த அவர் கம்பெனி வேனைக் கொண்டு வரச் சொன்ன அவர் தனது நண்பர்களை அதில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீரங்கப்பட்டினம்வரை சென்றார். ஆனால் ஜானகியை ஏற்றிக் கொண்டு சென்ற கார் எந்தத் திசையில் போனது என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அடுத்து என்ன செய்வது, எங்கே ஜானகியைத் தேடுவது என்று தெரியாமல் தவித்த எம்.ஜி.ஆர் இருந்த பரிதாபமான  நிலையைப் பார்த்த அவரது சகோதரர் சக்ரபாணி “ஜானகியுடன் இரண்டு பெண்களும்  சென்றிருப்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தேவையில்லாமல் பயப்படாதே. இரண்டொரு நாளில் நிச்சயமாக ஜானகியிடமிருந்து நல்ல செய்தி வரும்” என்று தனது தம்பிக்கு ஆறுதல் கூறினார்..

அதற்குப் பிறகு ஒரு வாரம் ஆகியும் ஜானகியிடமிருந்து எந்தத் தகவலும் வராததால்  எம்.ஜி.ஆர்  மிகப் பெரிய குழப்பத்திற்கு ஆளானார். அப்போது   “வருடப் பிறப்பிற்காக சென்னை வந்திருக்கிறேன். படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்தால் புறப்பட்டு வருகிறேன்” என்று ஜானகியிடமிருந்து “மருத நாட்டு இளவரசி” படத்தின் தயாரிப்பாளருக்கு வந்த  தந்தி எம்.ஜி.ஆரின்  குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.

முதலில் அந்தத் தந்தியை ஜானகிதான் கொடுத்தாரா இல்லை அவரது கார்டியனான மாமா கொடுத்திருக்கிறாரா என்பது பற்றி முடிவுக்கு வர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர் “படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்தால் புறப்பட்டு வருகிறேன்” என்றால் என்ன அர்த்தம்?இனி திருமணத்தைப் பற்றி நான் அவருடன் பேசக்கூடாது என்று ஜானகி சொல்ல வருகிறாரா என்றெல்லாம் எண்ணி  முதலில்  குழம்பினார். அதன் பின்னர்  சென்னைக்குப்  போனால்தான் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற முடிவில் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.

எம்.ஜி.ஆரது வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்த இந்த குழப்பங்கள்   பற்றி எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதிக்கோ ,அல்லது அவரது தாயாரான சத்யபாமா அம்மையாருக்கோ அப்போது எதுவும் தெரியாது. எல்லா விவரங்களையும்  அறிந்திருந்த ஒரே குடும்ப உறுப்பினர் அவரது அண்ணனான சக்ரபாணி மட்டுமே.

சென்னைக்கு வந்தவுடன்  தனியாகச் சென்று  ஜானகியை சந்திப்பது  சரியாக இருக்காது என்று  முடிவெடுத்த எம்.ஜி.ஆர் ஒரு போலிஸ் அதிகாரியின் துணையுடன் ஜானகி வீட்டுக்கு போக முடிவு செய்தார்.

அவரது ஒப்பனை நிபுணரான பீதாம்பரத்தின் அண்ணன் அப்பு நாயருக்கு காவல் துறை அதிகாரிகளிடம் நல்ல தொடர்பு உண்டு என்பதால் அவரிடம் எல்லா விவரங்களையும் எம்.ஜி.ஆர். சொன்னார். அதன் பின்னர் மந்தைவெளி பகுதியின் காவல்துறை அதிகாரியிடம் அப்பு நாயர் தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ள அவர்களுடன்  ஜானகி தங்கியிருந்த இல்லத்துக்கு வர ஒப்புக் கொண்டார் அந்த அதிகாரி.

ஜானகி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றதும் ”உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் தைரியமாக சொல்லும்மா. போலீஸ் உனக்கு தக்க பாதுகாப்பு கொடுக்கும்” என்று ஜானகியிடம் அந்தக்  காவல்துறை அதிகாரி கூறினார். 

ஜீப் கார் ஒன்று வாங்க சொல்லியிருப்பதாகவும் அதை வாங்கியவுடன் அந்த ஜீப் காரிலேயே மோதி எம்.ஜி.ஆரை தீர்த்துக் கட்டி விட எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதற்கு முன்னால் எம்.ஜி.ஆர். ஜானகியை சந்திக்க மந்தைவெளிக்கு வந்தால் அவரது  காலை வெட்டிவிடப் போவதாகவும் ஜானகியின் மாமா விடுத்திருந்த மிரட்டல்களினால் பயந்து போயிருந்த ஜானகி தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அந்த காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.

அவர் ஒருவித பயத்தில் இருப்பதை அடையாளம் கண்டு கொண்ட அந்த காவல் அதிகாரி  “நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்குத் தேவையான எல்லா பாதுகாப்புகளையும் நாங்கள் தருவோம்” என்று சொன்னவுடன் கொஞ்சம் பயம் தெளிந்த ஜானகி, ”இவரை கைது செய்து விடுவார்களா?” என்று கேட்டபோதுதான் ஜானகியை எம்ஜிஆர் சந்தித்தால் அவரை போலிஸ் கைது செய்துவிடும் என்று  சொல்லி யாரோ ஜானகியை மிரட்டியிருக்கிறார்கள் என்ற விவரம் அந்தக் காவல் துறை அதிகாரிக்குப் புரிந்தது.

அதற்குப் பிறகு ஜானகிக்கு ஆறுதலாக அந்த காவல்துறை அதிகாரி நீண்ட நேரம் பேசியவுடன் ”நான் என்ன விரும்புகிறேனோ அது நடப்பதற்கு  என்னுடைய சொந்தக்காரர்களும், பெரியவர்களும் பேசிக்கிட்டிருக்காங்க. கூடிய சீக்கிரத்திலேயே எல்லாம் சரியாகி விடும். அதற்கிடையில் இவருக்கு எந்த ஆபத்தும் வராம நீங்க பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் ஜானகி.

“உங்களுக்கு எப்போது எங்களுடைய உதவி வேண்டும் என்றாலும் இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்” என்று சொல்லி காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை எழுதி ஜானகியிடம் கொடுத்துவிட்டு அந்த காவல் அதிகாரி கிளம்பியபோது அவருடன்  எம்.ஜி.ஆரும் கிளம்பினார்.

அப்போது எம்.ஜி.ஆரை மட்டும் சைகை மூலம் அழைத்த ஜானகி “நான் உங்களுக்குத்தான் என்பது முடிவாகிவிட்டது. என்றாலும் உங்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாமல் இருக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ”தனியாக வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்” என்று அவரை எச்சரித்து அனுப்பினார்.

(தொடரும்)