Friday, April 12, 2024

சினிமா வரலாறு-38 – எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் என்ற அடையாளத்தைத் தந்த இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1946-ம் ஆண்டு தீபாவளியன்று ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  ‘ஸ்ரீமுருகன்’ மற்றும்  டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ‘வித்யாபதி’ ஆகிய இரு படங்களும்  திரைக்கு வந்தன.

அதுவரையில் ஒரே நிறுவனம் தயாரித்த இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்ததே இல்லை. ஆகவே, இந்தியாவில் அப்படிப்பட்ட சாதனையைச்  செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஜுபிடர் பிக்சர்ஸ் பெற்றது.

ஆனால், இந்த இரண்டு படங்களால் அவர்களுக்குக் கிடைத்தது அந்தப் பெயர் மட்டும்தான் என்பதுதான் மிகப் பெரிய சோகம். ஒரே நாளில் வெளியான அந்த இரு படங்களும் ஒரே மாதிரியாக தோல்வியைத் தழுவின.

அப்போது ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கதாசிரியராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்  ஏ.எஸ்.ஏ.சாமி. அவருக்கு ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை கொடுக்க முடிவெடுத்த ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான சோமுவும், மொகிதீனும் ஒரு நாள் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களை அழைத்து அவரிடம் மனம் விட்டுப் பேசினார்கள்.

நீங்கள் டைரக்ட் செய்யப் போகும் முதல் படம் இது என்பதால்  உங்களது படத்தில் பெரிய நடிகர்களைப் போட்டு எங்களால் ரிஸ்க் எடுக்க முடியாது. அதனால் நம் கம்பெனி ஒப்பந்தத்தில் இருக்கும் நடிகர்களை வைத்துத்தான் நீங்கள் படம் எடுக்க வேண்டும்” என்று அவரிடம் இவர்கள் கூற அந்த நிபந்தனையை அப்படியே ஒப்புக் கொண்ட ஏ.எஸ்.ஏ.சாமி  சோமுவும், மொகிதீனும் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு ‘ராஜகுமாரி’ என்ற பெயரில் ஒரு  அருமையான திரைக்கதையைத் தயார் செய்து அவர்களிடம் சொன்னார்.

கதையைக் கேட்டவுடன் தனது முடிவை அடியோடு மாற்றிக் கொண்ட ஜுபிடர், சோமு இருவரும் ”கதை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், இந்தக் கதையை நமது கம்பெனி நடிகர்களை வைத்து எடுத்தால் நிச்சயமாக எடுபடாது. அதனால் கதாநாயகனாக பி.யு.சின்னப்பா அவர்களையும் கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்து விடுவோம்..” என்றார்கள்.

அந்தக் கால கட்டத்தில் தமிழ்ப் பட உலகில் இருந்த இரண்டு  சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.தியாகராஜா பாகவதரும், பி.யு.சின்னப்பாவும்தான். 

இன்றைய சூழ்நிலையில் புதுமுகங்களை வைத்துப் படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு இயக்குநரிடம் “உங்களது படத்திற்கு அஜித்தையும் -நயன்தாராவையும் ஒப்பந்தம் செய்து தருகிறேன்” என்று ஒரு  தயாரிப்பாளர் சொன்னால் எந்த ஒரு புது இயக்குநராவது வேண்டாம் என்று சொல்வாரா…?

ஆனால் ஏ.எஸ்.ஏ.சாமி அந்த காரியத்தைச் செய்தார்.

எனக்கு பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் வேண்டாம். உங்களது ‘ஸ்ரீமுருகன்’ படத்திலே சிவனாகவும், பார்வதியாகவும் நடித்த ராமச்சந்திரனையும் மாலதியையும்  நீங்கள் ஒப்பந்தம் செய்து தாருங்கள்.. போதும்..” என்றார்.

அன்று அவர் எடுத்த அந்த முடிவுதான் எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயரிலே திரையுலகில் ஒரு சரியான அங்கீகாரம்  கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் என்ற அடையாளத்தைத் தந்தது.

ஏ.எஸ்.ஏ.சாமி அப்படி சொன்னவுடன்  சோமு அவர்களுக்கும் மொகிதீன் அவர்களும் அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொள்ளவில்லை. “இது நீங்கள் டைரக்ட் செய்யப் போகும் முதல் படம். அதில் பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தார்கள் என்றால் வெற்றி நிச்சயம். செலவைப் பற்றி கவலைப்படாமல் நாங்களே பெரிய நடிகர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்..?” என்று ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டனர்.

ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க முடியும்  என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க எனக்கு எதற்கு மிகப் பெரிய நட்சத்திரங்கள்..?” என்று ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னவுடன் “உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது அதில் குறுக்கிட நாங்கள்  விரும்பவில்லை. உங்கள் விருப்பப்படியே   படம் எடுங்கள்” என்று இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கு தயாரிப்பாளர்கள் இருவரும் பச்சைக் கொடி காட்டினார்கள்.

‘ராஜகுமாரி’ படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றிருந்த எஸ்.எஸ்.சுப்பையா நாயுடு அவர்கள் எம்.ஜி.ஆரின்  மிக நெருங்கிய நண்பர். ஆகவே ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன செய்தி அவர் காதுக்கு எட்டியதும் உடனே எம்.ஜி.ஆரை  சந்தித்து அந்த இனிய தகவலைப் பகிர்ந்து கொண்டார் அவர்.

அந்தச் செய்தியைக் கேட்டதும் ராமச்சந்திரன் துள்ளிக் குதிக்கவில்லை. ஏனெனில் ‘சாயா’ என்றொரு  படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பல நாட்கள் நடித்த பின்னர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காயத்தின் வடு அந்த அளவிற்கு அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

தான் சொன்ன விஷயம் ராமச்சந்திரனின் முகத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததைப் பார்த்தவுடன் “ஏ.எஸ்.ஏ.சாமி உங்களது நெருங்கிய நண்பர்தானே. ஆகவே அவரிடமே ‘ராஜகுமாரி’ பட நாயகன் நீங்கள்தானா என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்” என்றார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

அதைத் தொடர்ந்து  ஏ.எஸ்.ஏ.சாமியை M.G.ராமச்சந்திரன் சந்தித்தபோது ‘ராஜகுமாரி’ படத்தின் நாயகன் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார் அவர்.

ராஜகுமாரி’ படம்தான் கதாநாயகனாக எம்.ஜி.ஆருக்கு முதல் படம் என்பதால் எம்.ஜி.ஆருக்கு அந்தப் படத்தில் சம்பளம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது . அதே படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் நடித்த டி.எஸ்.பாலையாவுக்கு எம்.ஜி.ஆரின் சம்பளத்தைப் போல நான்கு மடங்கு சம்பளம் தரப்பட்டது.

பின்னாளில் எம்.ஜி.ஆர்.அவர்களோடு திரையுலகில் மிக நெருக்கமாக இருந்த பலர் இந்த ‘ராஜகுமாரி’ படத்தில் அவரோடு பணியாற்றினார்கள். எம்.ஜி.ஆர். நடித்து பதினாறு படங்களை இயக்கிய எம்.ஏ.திருமுகம் அந்தப் படத்தில் உதவி எடிட்டராக பணி புரிந்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற தேவர் பிலிம்ஸ் அதிபரான சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் ‘ராஜகுமாரி’யில்தான் முதன்முதலாக எம்.ஜி.ஆரோடு நடித்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம் பெற்ற இன்னொரு நடிகரான எம்.என்.நம்பியார் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்த முதல் படமும் இதே ‘ராஜகுமாரி’தான்.

கலை உலகில் மட்டுமின்றி அரசியலிலும் எம்.ஜி.ஆர். அவர்களோடு இணைந்து பல ஆண்டுகள் பயணம் செய்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எம்.ஜி.ஆரோடு இணைந்து பணியாற்றிய முதல் படமாகவும் ‘ராஜகுமாரி’ அமைந்தது.

கலைஞர் கருணாநிதி  அந்தப் படத்திலே பணியாற்றக்  காரணமாக அமைந்தவர் பிரபல பாடகரான சிதம்பரம்.எஸ்.ஜெயராமன். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த ‘உதயணன்’ என்ற திரைப்படத்துக்கு இசையமையக்க இவர்  ஒப்பந்தமானார்.

அது தொடர்பாக அடிக்கடி ஜுபிடர் பிக்சர்சுக்கு வந்தபோது ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

என் மைத்துனரான மு.கருணாநிதி திராவிடர் கழகத்தில் இருக்கிறார். இப்போது ‘குடியரசு’ பத்திரிகையிலே பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர் மிகச் சிறந்த எழுத்தாற்றால் கொண்டவர். சந்தர்ப்பம் வரும்போது அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஒரு முறை தன்னிடம் சிதம்பரம் ஜெயராமன்  கூறியதை நினைவில் வைத்துக் கொண்டிருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, தனக்கு ‘ராஜகுமாரி’ படத்தை இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்ததும் தன்னுடன் இணைந்து வசனம் எழுத வரும்படி கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கோவைக்கு சென்று ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களைச் சந்தித்த கலைஞர் கருணாநிதிக்கு ஏற்கனவே பல  நாடகங்களை எழுதிய அனுபவம் இருந்ததால் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் சொன்ன காட்சிகளுக்கு எல்லாம் உடனுக்குடன் அவர் வசனங்களை  எழுதிக் கொடுத்தார். வசனம் எழுதுவதில் அவருக்குள்ள ஆற்றலைப் பார்த்து அசந்து போன ஏ.எஸ்.ஏ.சாமி முழு திரைப்படத்திற்கும் அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

ஒரு திரைப்படக் கதையைப் போலவே எதிர்பாராத பல திருப்பங்களை படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘ராஜகுமாரி’ சந்தித்தது. 

“ராஜகுமாரி” சந்தித்த அந்த திருப்பங்கள் என்னென்ன எனபதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Read more

Local News