சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் அட்லீ ல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர், “ ‘ஜவான்’ படத்தில் சில பேருக்கு தந்தை – மகன் உறவு பிடித்திருக்கும், சிலருக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும், சிலருக்கு ஆக்ஷன் பிடித்திருக்கும். ஏதோவொரு வகையில் இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கும். அதுதான் என்னுடைய பாணி.
ஒரு படத்தை உருவாக்க எனக்கு பலவகையான கதைகள், கதைக்களங்கள் தேவை. ஒரு திருவிழாவுக்குச் சென்றால் அங்கே ராட்டினம் இருக்கும், பெரிய தோசைகள் கிடைக்கும், இதுபோல பலவகையான விஷயங்கள் இருக்கும். வீட்டுக்கு வரும்போது நாம் முழு திருப்தியுடன் இருப்போம். என்னுடைய வேலையும் அதுதான். என்னுடைய திரைப்படம் உங்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கை தரவேண்டும். வீட்டுக்குச் செல்லும்போது ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டோம் என்ற ஒரு பொறுப்புணர்வு கிடைக்க வேண்டும். இதுதான் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான என்னுடைய கொள்கை. என்னால் ஒரே ஒரு கதையை வைத்து படம் எடுக்க முடியாது” இவ்வாறு அட்லீ கூறினார்.