கே.சி. ரவிதேவன் இயக்கத்தில், ஷ்ரிதா ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சிங்கா. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மதியழகன் தித்திர் பிலிம் ஹவுசுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

படத்தைப் பற்றிக் கே.சி. ரவிதேவன் கூறுகையில், “இந்த சவாலான கதையை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக முன்னணி நடிகைகளை அணுகியபோது, அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும், நிஜ சிங்கத்துடன் நடிக்க பலர் தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் மிகுந்த துணிச்சலுடன் இந்த வாய்ப்பை ஏற்று, சிறப்பாக பங்களித்து வருகிறார். மேலும் இப்படத்தில் உள்ள ஒரு எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டியிருந்தது. அதற்கான பொருத்தமான, பயமின்றி நடித்திடக் கூடிய நடிகையைத் தேடும் முயற்சிக்குப் பிறகு, 1945, பொதுநலன் கருதி, ஜவான் போன்ற படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸை தேர்வு செய்தோம். அவர் இந்த வேடத்தை மிகத் திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கதை மொழிகளைக் கடந்து செல்லக்கூடியது என்பதால், சிங்கா திரைப்படத்தை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இது அமைந்திருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.