நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் இயக்கும் புதிய படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் தங்கர்பச்சான் சென்ற மாதம், தான் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்தப் புதிய படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, கௌதம் மேனன், ஆர்.வி.உதயகுமார், மஹானா சஞ்சீவி, பிரமீட் நடராஜன், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார்கள்.
எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான், ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – மைக்கேல், செட் டிஸைன் – முத்துராஜ், நிர்வாகத் தயாரிப்பு – வராகன், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு – டி.வீரசக்தி.
இந்தப் படத்தில் இன்றைக்கு 2 முக்கியமான அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளனது.
முதலாவதாக ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார் என்று இன்றைக்கு அறிவித்துள்ளார்கள்.
இரண்டாவதாக படத்தின் தலைப்பை சிறிது மாற்றியிருக்கிறார்கள். துவக்கத்தில் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று இந்தப் படத்திற்கு தலைப்பு வைத்திருந்தார்கள். தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 25-ம் தேதி முதல் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து சென்னை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்களில் அனைத்து நடிகர்களும் நடிக்கவிருக்கிறார்களாம்.
தங்கர்பச்சானின் முந்தைய திரைப்படங்களை போலவே இந்தப் படமும் தங்கர்பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
“சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட திரைப்படமாக இது இருக்கும்…” என தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
‘கண்மணி’ என்னும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார்.