அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் 2021ஆம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பின்னர் ஒரு மராத்தி மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, பிரதீப் ரங்கநாதன் நடித்தும் அஸ்வத் மாரிமுத்து இயக்கியும் வெளியான திரைப்படம் ‘டிராகன்’. இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோஹர், தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார்.
அகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இதில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கும் தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இப்படம் தொடர்பான அடுத்தஅடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கயாடு லோஹர், ‘இதயம் முரளி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை படக்குழு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.