நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா தம்பதியினரின் இளைய மகனான அக்கில் மற்றும் ஜைனாப் ரவ்ட்ஜீ ஆகியோரின் திருமணம் வரும் ஜூன் 6ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் அரசியல் மற்றும் சினிமா உலகை சேர்ந்த பிரபலங்களை அழைத்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா.

கடந்த வாரம், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். இன்று ஆந்திராவின் தலைநகரமான அமராவதிக்கு சென்று, அங்குள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, அவருக்கும் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நாகார்ஜுனா கலந்து கொண்டார். கூலி மற்றும் குபேரா போன்ற திரைப்படங்களில் நாகார்ஜுனா நடித்துள்ளதனால், ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரை அவர் அழைத்திருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது. மேலும், தமிழ் திரையுலகை சேர்ந்த மற்ற நண்பர்களையும் அவர் அழைத்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.