‘இளைய தளபதி’ விஜய் பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் நடிகர் மதன் பாப் பேசியிருக்கிறார்.
“விஜய் மாதிரி ஒரு அமைதியான, அதே சமயம் கூர்ந்து கவனிக்கும் ஆள் வேற யாரும் இல்லை. ‘சுறா’ படத்தில் அவருடன் நடிக்கும்போது என்கிட்ட, ‘நீங்க ரொம்பப் படிப்பீங்களோ…?’ என்று கேட்டார். ‘இல்ல ஸார்.. கொஞ்சம்தான்..’ என்றேன்.
அப்போது அந்தப் படத்திற்குப் பின்னர் அவர் நடித்த ‘நண்பன்’ படத்தில் இருந்து ஒரு காட்சியைச் சொல்லி ‘ஒருத்தரைக் கூப்பிட்டு பால் கொடுக்குற மாதிரி சீன் இருக்கு.. இதையெல்லாம் மக்கள் ஏத்துக்குவாங்களா.. சரியா வருமா…?’ என்று ஒரு காட்சியைச் சொல்லி கேட்டார்.
அப்போ, “காமராசு’ படத்துல ஊருக்கே நல்லது செய்யற ஹீரோவுக்கு ஒரு பொண்ணு தாய்ப்பால் கொடுக்குற காட்சியிருக்கு ஸார்.. அந்த நேரத்துல மக்களுக்கு வல்காரிட்டி ஒண்ணும் தோணாது.. கண்ணுல தண்ணிதான் வரும் ஸார்”ன்னு சொன்னேன்.
அதற்குப் பின்னாடி கே.எஸ்.ரவிக்குமார் ஸார் வீடு கட்டியிருந்தார். கிரஹப்பிரவேச நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருந்தார். நானும் போயிருந்தேன். அங்க மாடில ஒரு இடத்துல விஜய் உக்காந்திருந்தார். நான் அவரைப் பார்த்ததும் ‘ஹலோ ஸார்’ன்னு சொன்னேன். அவரும் ‘ஹலோ’ன்னு சொன்னார். ஆனால், அவர் ‘ஹலோ’ சொன்னவிதம் கூப்பிட்ட மாதிரி இருந்ததால பக்கத்துல ஓடிப் போய் ‘என்ன ஸார்..?’ன்னு கேட்டேன். ‘இல்ல பாஸ்.. நான் ஹலோன்னுதான் சொன்னேன்’ணார். அதுதான் விஜய்யோட ஸ்டைல்.. அவரை எனக்கு ரொம்பவும் புடிச்சதுக்குக் காரணமே அவரோட இந்த ஸ்டைல்தான்..!” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மதன்பாப்.