Saturday, July 27, 2024

தினத்தந்தி, தினகரனைப் புறக்கணிக்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ இன்றைக்கு எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவைப் பார்த்து திரையுலகமே ஆச்சரியப்படுகிறது.

பொதுவாக தமிழ்த் திரையுலகம் விளம்பர வடிவத்தில் வளரத் துவங்கிய காலக்கட்டத்தில் இருந்தே சினிமா துறையைத் தூக்கிப் பிடித்து வந்தது ‘தினந்தந்தி’ மற்றும் ‘தினகரன்’ பத்திரிகைகள்தான்.

இந்த இரண்டு பத்திரிகைகளில்தான் கட்டுப்பாடில்லாமல் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை வெளியிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த இரண்டு பத்திரிகைகளும் சினிமா விளம்பரங்களுக்காகவே அதிகமாக வாங்கப்பட்டன.

இதன் காரணமாகவே வெள்ளி தோறும் இன்றுவரையிலும் ‘சிறப்பு சினிமா செய்தி மலரை’ இந்த இரண்டு பத்திரிகைகளுமே வெளியிட்டு வருகின்றன.

இந்தத் தினசரிகள் இல்லாமல் மற்ற தினசரிகளும் அவ்வப்போது தயாரிப்பாளர்கள் தங்களது பட விளம்பரத்தை அளித்து வந்தாலும், இந்த இரண்டுக்கு மட்டுமே தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். இதற்கேற்றாற்போல் இந்த பத்திரிகைகளும் சலுகை விலையில் விளம்பரங்களை அனுமதித்து வந்தன.

காலப்போக்கில் தயாரிப்பாளர்களின் செலவுகளையும், பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்களின் வித்தியாசத்தைக் கட்டுப்படுத்தவும் விளம்பரத்தில் பல கட்டுப்பாடுகள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் கொண்டு வரப்பட்டது.

இப்போது இந்தக் கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளின் விற்பனை சரிந்ததையடுத்து பல்வேறு நிதி சிக்கல்களில் இந்த இரண்டு பத்திரிகைகளும் சிக்கிக் கொண்டன. அந்தச் சிக்கல்களுக்காக ஊழியர்கள் குறைப்பு, ஊதியம் குறைப்பு என்று பல்வேறு நடவடிக்கைகளை இந்தப் பத்திரிகைகள் மேற்கொண்டன.

அவற்றுடன் சினிமா விளம்பரங்களுக்கான விளம்பரக் கட்டணத்தையும் கிட்டத்தட்ட 4 மடங்கு அளவுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளும் உயர்த்திவிட்டன. இது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பேசியபோது “எதையும் மாற்ற செய்ய முடியாது” என்றே பதில் வந்தது. இடையில் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கமாக ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவானது.

தற்போது அதிகமாக படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இந்தச் சங்கத்தில் மட்டுமே இருப்பதால் இவர்களும் விளம்பரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக இந்த இரண்டு பத்திரிகை நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், “விளம்பரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது…” என்று பத்திரிகைளின் நிர்வாகத்தினர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

இதனால் தற்போது ‘இந்து தமிழ்’ பத்திரிகையில் இந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அவர்களோ தற்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’ பத்திரிகைகளுக்குத் தயாரிப்பாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்த தொகைக்கே விளம்பரத்தை வெளியிட முன் வந்திருக்கிறார்கள்.

“எனவே, இத்தனையாண்டுகளாக ‘தினத்தந்தி’, ‘தினகரன்’ பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருந்த நாங்கள், தற்போது ‘இந்து தமிழ்’ பத்திரிகைக்கு இடம் மாறுகிறோம்…” என்று இன்றைக்கு ஒரு அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளனர் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

“பத்திரிகையுலகத்தில் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் இருக்கும் ‘தினத்தந்தி’ மற்றும் ‘தினகரனை’ புறக்கணித்து நான்காமிடத்தில் இருக்கும் பத்திரிகைக்கு போவதற்கு இந்தச் சங்கத்தினருக்கு எப்படி தைரியம் வந்தது..?” என்று திரையுலகத்தினர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

ஏனெனில் ‘தந்தி தொலைக்காட்சி’, ‘சன் தொலைக்காட்சி’ இவைகள் இரண்டுமே தமிழகத்தில் பலம் வாய்ந்தவை. அதிலும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரில் முக்கால்வாசி பேர் தங்களது படங்களுக்கான டிவி விளம்பரத்தை சன் தொலைக்காட்சிக்குத்தான் தருவார்கள். சன் தொலைக்காட்சிக்குத் தங்களது படங்களின் டிவி உரிமையைக் கொடுப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் சங்கத்தின் இந்த உத்தரவினை மற்ற தயாரிப்பாளர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது..!

- Advertisement -

Read more

Local News