Friday, April 12, 2024

குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

்ரீவாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார்.

பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான நடிகர், நடிகைகள் நடித்திருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்குவதற்கு பெரிதும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளரும், இயக்குநரும் திரையரங்கில்தான் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருந்ததால் ஆனந்தம் விளையாடும் வீடு’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரையரங்குகளில் குடும்பங்கள் நிறைந்த கூட்டத்தை இந்தப் படம் கொண்டு வரும் என்று படத்தின் சில பகுதிகளை பார்த்த முன்ணனி திரைப்பட விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ரங்கநாதன் இதற்கு முன்பு யோகி பாபு ஹீரோவாக நடித்த தர்ம பிரபு’ படத்தைத் தயாரித்தவர்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசும்போது, “நான் தயாரித்த முதல் படமான ‘தர்ம பிரபு’ படம் நினைத்ததைவிடவும் ஹிட் ஆனதால், அடுத்த படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், அது ஒரு பக்காவான குடும்ப படமாக இருக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்திருந்தேன்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை அறவே அழிந்து போன காலமிது. கொரோனா என்னும் கொடூர தொற்றுக் காலத்தில்கூட பக்கத்து வீட்டுக்காரர் யார் என்பதுகூட தெரியாமல் வாழ்ந்துவரும் இன்றைய சமூகத்திற்கு கூட்டுக் குடும்ப வாழ்வியலையும், அதன் மகிழ்வையும் ஆவணப்படுத்தவும் அதனை அகன்ற திரையில் காண்பிக்கவும் பெரிதும் ஆசைப்பட்டேன்.

அப்போது என்னை சந்தித்த இயக்குநர் நந்தா பெரியசாமி இன்னொரு கதை சொன்னார். அதில் இம்ப்ரஸ் ஆகாத என்னிடம் “ஒரு குடும்பம் ஒரு காரணத்துக்காக பிரிஞ்சிருக்காங்க.. அவங்களை ஹீரோ எப்படி ஒண்ணு சேர்க்கிறார்ங்கிறதுதான் இன்னொரு படத்தின் ஒரு வரி கதை..” என்றார். அது நான் நினைத்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையுடன் ஒத்துப் போனதால் செலவைப் பற்றியே கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரித்துவிட்டேன்…” என்றார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “இது பொது முடக்கத்திற்கு முன் துவக்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம். சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

பொது முடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்பு தந்தார். இப்படம் நன்றாக வர முழு முதல் காரணமும் தயாரிப்பாளர்தான். பெரும் தடைகள் பலவற்றை தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம்.

தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும். ஒன்றாக இருக்கும், ஒரு குடும்பத்தில் சூழலால்  வரும் பிரச்சனைகளை தாண்டி, அண்ணன், தம்பிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்று சேர்கிறான் என்பதுதான் கதை.

இப்படத்துக்கான துவக்கப் புள்ளி என் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கியது. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ரொம்ப நல்லவர்களாகவே இருந்தாலும் நடுவில் சிலர் தலையிட்டு தேவையில்லாததை பேசி  இருவருக்குள்ளே பிரச்சினையை ஏற்படுத்திடுறாங்க..

இப்படி என்னோட அக்கா கணவருக்கும், அவருடைய அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, பல உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக இந்தப் படம் உருவாகியுள்ளது,

பிரிந்த உறவுகளை இணைப்பதற்காக இரண்டு குடும்பங்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கிறார்கள் என்பதுடன் செண்டிமெண்ட் காட்சிகளுடன் ஓர் இலக்கை நோக்கி கதை பயணப்படும். அந்த இலக்கு என்ன என்பதுதான் ரகசியம். கிளைமாக்சில் அந்த இலக்கை அடைவது எப்படி என்பதை சுவையான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

இதில் கெளதம் கார்த்திக் எனக்கு  ஹீரோவாக வாய்த்தது என்னோட அதிர்ஷ்டம்ன்னுதான் சொல்லணும். மூன்று மணி நேரம் நான் சொன்ன கதையைப் பொறுமையாக கேட்டார். அவரோட கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல். படிப்பை முடித்து, தன் சித்தப்பாவுக்கு துணையா இருக்கும் ஜூனியர். வீட்டுக்கு வெளியே பாயும் புலி என்றால் பெரியர்கள் முன்பாக பணிவு காட்டுவார்.

ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். அவருக்கு நன்றாக தமிழ் தெரிந்ததிருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும்.  

இயக்குநரும், நடிகருமான சேரன் இந்தப் படத்தின் இன்னொரு பலம். மொத்தக் கதையும் அவரைச் சுற்றித்தான் நடக்கும். கதை பிடித்த காரணத்தால் மட்டுமே அவர் நடிக்க சம்மதித்தார்.

படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம் போல்தான் இருந்தோம். படமும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும்..” என்றார்.

இந்த ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில்,  படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.

இத்திரைபடம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News