Friday, April 12, 2024

‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கங்கனா ரணாவத் நடித்திருக்கும் ‘தலைவி’ திரைப்படம் வட இந்தியாவில் திரையிடுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

வட இந்தியாவில் மிக அதிகமான மால் தியேட்டர்களைத் தங்கள் கை வசம் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினி போலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் ‘தலைவி’ படத்தைத் திரையிடுவதாக இல்லை என்று சொல்லிவிட்டன.

தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ‘தலைவி’ படத்தை வெளியிட வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நிராகரித்ததே இதற்குக் காரணம்.

‘தலைவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியே சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதற்கான மாஸ்டர் பிரிண்ட்டும் தனித்தனியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

‘தலைவி’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘தலைவி’ படத்தின் ஹிந்தி உரிமை மட்டும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனையாகியுள்ளது.

தியேட்டர்களின் 4 வார கால இடைவெளி நிபந்தனையை தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமேஸான் நிறுவனம் ஏற்றுக் கொண்டதையடுத்து ‘தலைவி’ படத்தின் தென்னக மொழிகளின் பிரதி அமேஸான் பிரைம் வீடியோ தளத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இதன் ஹிந்தி பதிப்பை ஓடிடியில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த நிபந்தனையை ஏற்க மறுக்கிறது. 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதால் தாங்கள் இதை ஏற்க முடியாது என்று நெட்பிளிக்ஸ் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

தயாரிப்பாளர்கள் தரப்பும் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போயுள்ளனர். வேண்டுமென்றால் 55 கோடியைக் கொடுத்துவிட்டு படத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாம்.

இதனால் வட இந்தியாவில் மிக அதிகத் தியேட்டர்களைக் கையில் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் தலைவியைத் திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில் இந்தப் பிரச்சினை குறித்து வருத்தப்பட்டிருக்கும் படத்தின் நாயகியான கங்கனா ரணாவத், சமூக வலைத்தளத்தில் மிகவும் வருத்தப்பட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “எந்தத் திரைப்படமும் இன்றைய சூழலில் திரையரங்க வெளியீட்டுக்குச் செல்வதில்லை. விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் போன்ற துணிச்சலான சில தயாரிப்பாளர்கள்தான் பெரிய லாபத்தை வேண்டாம் என்று சமரசம் செய்து கொண்டும், பிரத்தியேக ஓடிடி வெளியீட்டு வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் காதல்.

இந்தக் கடினமான சூழலில் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும். துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது. நாங்கள் செய்திருக்கும் படத்தின் முதலீட்டைத் திரும்பச் சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை உரிமை.

இந்தி பதிப்புக்கு 2 வார கால இடைவெளி இருக்கிறது. தமிழுக்கு 4 வாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அங்கு மல்டிப்ளக்ஸ் தரப்பில் அனைவரும் எங்களுக்கு எதிராக அணி திரண்டு எங்கள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கிறார்கள்.

மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இது போன்றதொரு சோதனைக் காலத்தில் இது நியாயமற்ற, கொடூரமான செயல். திரையரங்குகளைக் காப்பாற்ற நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

- Advertisement -

Read more

Local News