‘தாம்தூம், தலைவி, சந்திரமுகி – 2’ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்த கங்கனா ரணாவத், பாலிவுட்டின் முன்னணி நடிகையாவார். இவர் ‘எமர்ஜென்சி’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கி, அதில் நடித்து, தயாரித்திருந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அவசர நிலையை மையமாகக் கொண்டது.

இந்தப் படம் ஜனவரி 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால், வசூலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது, Netflix OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அந்நிலையில், ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில், இந்த ‘எமர்ஜென்சி’ படத்தை இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று பதிவு செய்தார்.
இந்தப் பதிவை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அமெரிக்கா தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை எவ்வாறு மிரட்டி, ஒடுக்கி, வளைக்கிறார்கள் என்பதை எமர்ஜென்சி படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, அவர்களின் அர்த்தமற்ற ஆஸ்கர் விருது அவர்களிடமே இருக்கட்டும். எங்களுக்கு தேசிய விருது உள்ளது!என்று பதிலளித்துள்ளார்.
இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்திய படங்களுக்கு அங்கு பாகுபாடு காட்டப்படுவதாக நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான், ‘RRR’ திரைப்படத்திற்காக எம்.எம்.கீரவாணி போன்றவர்கள் ஆஸ்கர் வென்றனர். இந்த சூழலில், கங்கனா,நம் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தாலே போதுமானது என்று பதிவிட்டிருப்பது, மீண்டும் விவாதத்திற்குரியதாகி உள்ளது.