14,000 அடி பிலிமை பாஸிட்டிவ்கூட போடாமல் வீணாக்கிய இயக்குநர்..!

திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவருக்குமே பிடித்தமான ஒரு வார்த்தை ‘சிக்கனம்’ என்பதுதான். ஆனால் பல இயக்குநர்களுக்குப் பிடிக்காத வார்த்தையும் இதுதான்.

தயாரிப்பாளர்கள் ‘எந்த அளவுக்கு சிக்கனம் பிடித்தாலும் தவறில்லை’ என்பார்கள். ஆனால், அதே சமயம் அவர்களின் படங்களை இயக்கும் இயக்குநர்களோ, ‘எவ்வளவு செல்வு செய்தாலும் தப்பில்லை’ என்றுதான் பேசுவார்கள்.

பிலிமில் படமெடுத்துக் கொண்டிருக்கும்போது பல அடி பிலிம்கள் படத் தொகுப்பின் மீது தூக்கியெறியப்படும். வெட்டி வீசப்படும். காரணம், அவைகள் தேவையில்லை என்பதாக இருக்கும் அல்லது வீணானாவையாக இருக்கும்.

இது இல்லாமல் வேறு மாதிரியான ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகிவிட்டது. அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வந்தபோது அனைத்து பிலிம் கேன்களும் அங்கேயிருந்தன. அதில் ஒரு கேன் மட்டும் சீல் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. அதாவது படமாக்கப்பட்ட பிலிம்கள் அதில் இருந்தது.

தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி, “என்னய்யா இது.. கேனையே திறக்கலை.. படமே ரிலீஸாயிருச்சு.. என்னய்யா விஷயம்..?” என்று அங்கேயிருந்த இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். இயக்குநர் ரொம்பவும் கூலாக “அதெல்லாம் வேணாம் ஸார்.. அது இல்லாமலேயே படம் நல்லாத்தான் இருக்கு. அதான், அதை பாஸிட்டிவ் போடலை…” என்று மிக அலட்சியமாகச் சொல்லியிருக்கிறார்.

அந்தத் தயாரிப்பாளருக்குத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. அதையேதான் செய்தார்.

இது போலவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மிகப் பெரிய இயக்குநர் பரபரப்பான படம் ஒன்றை இயக்கியிருந்தார். ‘கடவுள்’ பெயர் கொண்ட அந்தப் படம் மிகப் பெரிய சர்ச்சையாகியிருந்தது. அதனால் அந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது.

படமும் வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த இயக்குநரை பாதிப் பேர் திட்டினார்கள். மீதி பேர் பாராட்டினார்கள். படத்தின் சர்ச்சையான கருத்துக்கள் பலவித பட்டிமன்றங்களுக்கு அடிகோலின. தயாரிப்பாளருக்கு போட்ட காசு வரவில்லை. கையைக் கடித்தேவிட்டது.

ஆனால், அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட 14,000 அடி பிலிமை அந்த இயக்குநர் பாஸிட்டிவ்வே போடவில்லை என்பதுதான் இதில் சுவையான விஷயம். 14,000 அடி பிலிமை படமாக்க அந்தத் தயாரிப்பாளர் எவ்வளவு பணத்தை செலவழித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள். அத்தனையும் வீண்தானே.. கடலில் கொட்டினாற் போன்று இந்த இயக்குநர் பணத்தை விரயமாக்கியிருக்கிறார்.

இதேபோல் கடந்தாண்டு சூர்யா நடிப்பில், செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்திலும் நடந்தது. பிலிமில் எடுத்தால்தானே செலவாகிறது. டிஜிட்டலில் செலவில்லையே என்ற நினைப்பில் அந்த இயக்குநர் மொத்தமாக மூன்றரை மணி நேரத்திற்குக் காட்சிகளை எடுத்திருந்தார்.

ஆனால், கடைசியில் அத்திரைப்படம் வெளியானபோது 2.30 மணிக்குள்ளாகத்தான் இருந்தது. மீதம் ஒரு மணி நேர காட்சிகளை வெட்டியெறிந்துவிட்டார் இயக்குநர்.

அவருக்கு அது படைப்பு சுதந்திரம். ஆனால் தயாரிப்பாளருக்கு…? வெட்டியெறிந்த காட்சிகளைப் படமாக்க எத்தனை லட்சங்களை அவர் கொட்டிக் கொடுத்திருப்பார்..?

இது பற்றி சில இயக்குநர்கள் சிந்திப்பதே இல்லை. தங்களுடைய படைப்பில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது என்றுதான் சொல்வார்களே தவிர.. இந்தச் செலவினத்தை ஒரு வீணான செலவாக நினைக்கவே மாட்டார்கள்.

இப்படிப்பட்ட இயக்குநர்களால்தான் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டே நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் முழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.